சிறுகதைகள்
https://unsplash.com/@cgower
ஊர்மிளையின் உறக்கம்

உலகம் முழுதையும் ஆளும் இராமனின் சபை. வெண் கொற்றக் குடையின் கீழ் இராமன் அமர்ந்திருக்கிறான். இராமனின் பட்டாபிஷேகம் முடிந்து அமர்ந்த இராமனின் பக்கத்தில் தம்பியர் மூவரும் இட்டபணி முடிக்க காத்திருக்கிறார்கள். தும்புரு நாரத கானங்கள் முழங்க, வானோர் பூ மாரிப் பொழிய அரம்பையின் நடனம் நடக்க.. எதையும் செவிக்கொடாமல் இராம் இராம் என்று இராமனின் பாதத்தை தொட்டு வணங்கிக் கொண்டிருப்பது சாட்சாத் அனுமனன்றி வேறு யார் ?

மகிழ்வுடன் இருந்த மக்கள் கூட்டத்தை சீதை நோக்கினாள். பின் இராம இலக்குவர்களை நோக்கினாள். இராமனின் முகம் வழமைப் போலவே அன்றலர்ந்த தாமரையாகவே இருந்தது. இராமனின் பக்கத்தில் அமர்ந்திருந்த சீதை இராமனிடம் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு மெல்ல எழுந்தாள். அவள் கண்களில் சற்றே நீர் கோர்த்திருந்தது.

" என் நாயக, உங்களிடம் எனக்கொரு கோரிக்கை உண்டு. ஐயனே "

இராமன் மனம் துணுக்குற்றது. சீதையின் கண்கள் எப்போது வேண்டுமானாலும் தாரைத் தாரையாக கொட்டக் கூடும் என்பதே இராமனுக்கு மிகுந்த துயரம் கொடுத்தது.

" இதென்ன கேள்வி சீதை. தைரியமாகச் சொல் என்ன வேண்டும். இந்த முடிசூட்டு விழாவில் ஏதும் குறையா ? என் அன்பினிற்குரிய ஜனக மாமன்னருக்கு ஏதும் மரியாதைக் குறைவேற்பட்டுவிட்டதா. எல்லாம் நானே முன்னின்று பார்த்து பார்த்து செய்தேனே.. சொல் சீதை. நீ அழுதக் கண்ணீர் அசோக வனத்தை நிரப்பியது போதும். இதற்கு மேலும் நீ அழுதால் இந்த பூமி தாங்குமா சொல் "

" ஐயனே, அதிலேது குறை. ஆயின் "

" சொல் சீதை.. எதுவெனிலும் சொல் "

" இங்கே யாரெல்லாம் இருக்கிறார்கள் "

" என் உயிருக்கும் மேலான தம்பியர் நால்வர், இதோ உன் தந்தையார், குரு வசிட்டர், உன் தங்கையர் மாண்டவி, ஸ்ருதிகீர்த்தி... ஊர்மிளை.. ஆமாம்.. ஊர்மிளையைக் காணவில்லையே.. எங்கே ஊர்மிளை "

" என் கண்ணீரின் காரணம் அதுவே ஐயனே. நாம் கானகம் செல்லும் போது என்னைப்போலவே ஊர்மிளையும் இளையவருடன் வர எத்தனித்தாள். ஆனால் இளையவரின் ஆணையினால் அவள் இங்கேயே தங்கினாள். அவள் என்னைப் போல் தன் கணவனிடம் வாதிடவில்லை. ஒரே ஒரு வரம் மட்டும் கேட்டுப் பெற்றாள் "

" இது என்ன ? இது நாள் வரை நீயோ இலக்குவனோ என்னிடம் கூறவில்லையே.. அது என்ன வரம் "

" ஐயனே, சற்று முன்பு இளையவர் தங்களின் வெண்கொற்றக் குடையை பிடித்திருக்கும் போது சற்றே சாய்ந்தது அல்லவா "

" ஆமாம் "

" அப்போது அவர் சிரித்தார் அல்லவா "

" ஆமாம்.. ஆனால் அது மகிழ்ச்சியினால் வந்ததல்லவா ? எத்தனை இடர் தாண்டி மீண்டிருக்கிறோம் இல்லையா அதற்கும் ஊர்மிளை கேட்ட வரத்திற்கும் என்ன சம்பந்தம்."

" சிரிப்பு அதனால் வரவில்லை ஐயனே. அவர் உங்களுடன் வர முற்பட்ட உடன், ஊர்மிளை கேட்ட வரத்தை அவர் தந்தார். ஊர்மிளை தன் நாயகன் திரும்ப வரும் வரைக்கும் அவரின் தூக்கத்தை இரவு பகலென்று இல்லாமல் மொத்தமாய் தனக்கு அளித்து விட்டு செல்லும்படி வரம் கேட்டார்.. இளையவரும் தந்துவிட்டார் "

இராமனின் கருணை மிகு கண்கள் இளையபெருமாளை நோக்கியது. வழமை போல் இளைய பெருமாள் அண்ணன் அண்ணியரின் திருவடியை நோக்கியவாரே நின்றார். இராமனின் கண்களில் வாத்சல்யம் ததும்பி நின்றது.

" ம்ம். மேலும் சொல் சீதை "

" இளையவர் நித்திரை தேவியிடம் வேண்டுகோள் வைத்தார். தான் திரும்ப அயோத்தி வந்து தங்களுக்கு மணிமுடி சூட்டும் வரைக்கும் அவள் ஊர்மிளையை ஆட்கொள்ள வேண்டும் என்றும் பிறகு எப்போது வேண்டுமானாலும் தன்னை ஆட்கொள்ளலாம் என்றும் "

" ம்ம்ம்.. " இராமனின் குரல் இளகியது.

" வெண் கொற்றக் கொடியை பிடித்திருந்த போது நித்திரா தேவி இளையவரை பீடிக்க வந்தாள். அந்த தடுமாற்றத்தால் சற்றே சாயப் போன இளையவர் வெண் கொற்றக் கொடியை பிடிப்பதில் தடுமாறினார். தன் வைராக்கியத்தால் உறக்கத்தினின்று விடுபட்டார். அதை நினைத்தே சிரித்தார் ஐயனே "

" மன்னிக்க வேண்டுகிறேன் அண்ணா.அண்ணியார் சொன்னது அத்தனையும் உண்மையே. நிலை தடுமாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடாது.. "

மகிழ்வோடிருந்த மக்கள் கூட்டத்தில் இது வரை கேட்ட இராம நாமம் மெலிந்து இலக்குவன் வாழ்க என குரல் உயர்ந்தது.

இராமன் இலக்குவனை நோக்கிச் சென்றான். அவன் கையினின்று வெண்கொற்றக் கொடியை வாங்கி பக்கத்தில் இருந்த பரதனிடம் கொடுத்தான். தன் தம்பியை ஆரத் தழுவினான்.

" எத்தனை கோடித் தவம் இது தம்பி.. உன்னை , இந்த பரதனை சத்ருக்கனை தம்பியாய் பெற்றதில் எனக்குத்தான் எத்தனை பேறு. இன்று இங்கு நடந்த முடிசூட்டு விழா நீயன்றி சாத்தியமாகியிருக்குமா ? என் உயிரல்லவா இலக்குவா நீ.. என் எந்தையடா நீ... என் தாயுமானவனடா நீ "

இராமன் உணர்ச்சியால் உடல் தளர்ந்து இலக்குவனை இறுக அணைத்துக் கொண்டான். இலக்குவனின் கண்களின் நீர் இராமனின் கால்களைத் தொட்டது.

" ஐயனே இளையவர் செய்தது மாபெரும் தியாகம், யாரும் செய்தற்கரிய பணியை செய்திருக்கிறார். அதில் ஐயமேதும் இல்லை. ஆனால் இவருக்காகவே காத்திருக்கும் அந்த அபலை, என் தங்கை ஊர்மிளையை சற்றே நினைத்துப் பாருங்கள். இத்தனை வருடங்கள் தன் நாயகன் வருவான் என்று தூக்கத்திலும் பிதற்றிக் கொண்டிருப்பவள் அவள். அவளுக்கு தயைக் காட்டுங்கள் ஐயனே "

" சீதை விளங்கும் படி சொல் "

" ஐயனே, இளையவர் இங்கிருந்தாலும் அவர் மனம் ஊர்மிளையை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறது. அவர் கண்ணின் நீர் சொல்லும் கதைகளை இன்னும் ஏன் அறிய மறுக்கிறீர்கள். அவர் தங்களை விட்டு தங்கள் அனுமதியின்றி ஊர்மிளையைக் காண போக மாட்டார். அதை வாய்விட்டு தங்களிடம் கேட்க மாட்டார் "

" எனக்கெப்படித் தெரியும் ? இளையவர் மகனொத்தவர் இல்லையா ? தாய்க்குத் தெரியாதா தன் மகனின் நிலை ? என் மகனை இப்படி தவிக்க விடுவது தான் முறையா ? சொல்லுங்கள் ஐயனே. மேலும் தன்னைக் காண வருவார் என்று இளையவருக்காக காத்திருக்கும் என் தங்கை ஊர்மிளை மீது கருணை வைத்து இளையவரை அனுப்பி வையுங்கள் "

இராமன் மௌனமானான். பெண்களின் நுண்ணறிவு தான் எத்தனை உயர்ந்தது என்பதை இராமன் மனத்தினுள் வியந்தான்.

" இலக்குவா, உடனே நீ கிளம்பு. ஊர்மிளை இருக்குமிடத்திற்கு. நீ உடனடியாக கிளம்ப வேண்டும். அவளிடம் மகிழ்வான வார்த்தைகளால் குளிர்வி. அவள் கண்ணீரைத் துடை. அவள் இனி மகிழ்ச்சியை மட்டுமே காண வேண்டும். உன் மனைவியை இப்படி தனியாக தவிக்கவிடுவது முறையா ?"

இராமன் அந்த கேள்வியின் அபத்தத்தை உணர்ந்து கொண்டான். இதில் யார் தவறு ? இலக்குவன் மீதா , ஊர்மிளை மீதா , சீதையின் மீதா அல்லது தன் மீதா. இலக்குவன் ஊர்மிளையை பிரிவதற்கு விதியல்லவா காரணம் என்று சமாதானமானான்.

இலக்குவன் இருவரையும் இரு கைகள் கூப்பித் தொழுதான். சட்டென்று தன் அண்ணியின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான். சீதையின் கண்ணீர் அவனை ஆசிர்வதித்தது. பின் ஏதும் பேசாமல் ஊர்மிளையின் அந்தப் புரம் நோக்கி விரைந்தான்.

பகலிலும் அதிக வெளிச்சம் ஊடுருவாத வகையில் திரைச்சீலைகளால் மூடப்பட்ட அறை அது. ஊர்மிளை தன் படுக்கை அறையில் படுத்திருக்கிறாள். மிகவும் மெலிந்திருக்கிறாள். இலக்குவன் நினைவொன்றே அவளை உயிரூட்டி வைத்திருக்கிறது. நித்திரை தேவி அவளை விட்டு விலகியிருக்க நினைத்தாலும் இன்னும் தூக்கத்தினின்று முழுமையாக விடுபடாமல் இருக்கிறாள்.

ஆயினும் அந்த மெல்லிய வெளிச்சத்திலும் அவள் முகம் பொலிவுடன் இருக்கிறது. தூசி படிந்த ஓவியம் போல ஊர்மிளை இருக்கிறாள். கதவு மெல்லத் திறக்கப் படும் ஓசை கேட்கிறது. ஊர்மிளையின் காது மடல்கள் உயர்கின்றன. உள்ளே வரும் காலடி ஓசை சர்வ நிச்சயமாக பணிப்பெண்களுடையதோ அல்லது தன் தாயொத்த கோசலையின் காலடி ஓசையோ அல்ல என்பதை அவள் மனம் எச்சரிக்கிறது.

இது ஒரு ஆணின் காலடி ஓசை. அதிர்வு தரும் இந்தக் காலடி ஓசை கண்டிப்பாக பெண்ணுடையதல்ல. உள்ளே நுழைந்த ஆடவன் தன்னை நோக்கி குனிகிறான், தன் கலைந்த ஆடையை சரி செய்கிறான்.

" பெண்ணே "

இது யாருடைய குரல், யாரிந்த புது ஆடவன், இவனை எப்படி பணிப்பெண்கள் உள்ளே விட்டார்கள். ஒருவேளை அவர்களுக்கு ஏதும் இடர் நேர்ந்திருக்குமோ ? ஏன் என் பக்கத்தில் வந்து அமர்கிறான்? என்னிடம் ஏன் பேசுகிறான் ?

" ஊர்மிளை, எழுந்திரு. நிலவினொளி ஒத்த உன் முகத்திற்கு யார் தான் ஈடாக முடியும்? தளிரொத்த உன் இதழ்களுக்கு பூவையோ எதுவுமே மாற்றாக கூற முடியாது. உன் பேச்சு தேனினும் இனியது. எழுந்திரு.. பேசு. இத்தனை நாளாய் உன் நினைவுத் தீ வாட்டி வாட்டி காய்ந்து கிடக்கும் என் மனதிற்கு இதமாகட்டும் உன் வார்த்தைகள். எழுந்திரு.. இந்த தங்க ஆபரணங்களை அணிந்து அவற்றிக்கு அழகூட்டு. கண்ணெ எழுந்திடு "

ஊர்மிளையின் உடல் நடுங்கியது. அவளின் தூக்கம் முழுதும் விட்டப்பாடில்லை. ஆயினும் அந்நிய ஆடவன் தன் அறைக்குள் இருக்கிறான் என்ற உணர்வு அவளை தாக்குகிறது.

" யார் நீ ? எதற்காக இங்கே வந்தாய் ? உனக்குத்தான் எத்தனைத் துடுக்குத்தனம் ? எந்த தைரியத்தில் இந்த தவறை இழைக்க முற்பட்டாய் ? "

" தனியாக இருக்கும் பெண்ணை கவர்ந்து செல்லலாம் என்று முடிவு கட்டினாயோ ? என் தந்தை ஜனகன் இதை அறிந்தால் என்னாகும் தெரியுமா ? இந்நாட்டரசன் இராமன் மட்டும் இதை அறிந்தால் உனக்கு மிகப்பெரிய ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்துக் கொள். என் சகோதரி சீதையின் மைத்துனர், மிகவும் கோபக்காரர். அவர் நீ உள்ளே வந்ததை அறிந்தாலே உன் உயிர் பறிபோகும் என்பதை உணரவில்லை நீ. "

" என்னுடைய பெரும்புகழ் கொண்ட குடும்பத்தின் புகழ் என்னால் களங்க்கமடந்ததோ ? என்ன செய்வேன் நான். உதவிக்கு யாரும் கூட இல்லையே "

" உனக்குத் தெரியுமா, மாற்றான் மனைவியின் பின் சென்றதால் இந்திரன் அசிங்கமான உடலைப் பெற்றான் என்பது ? அல்லது இராவணன் கொல்லப்பட்டதன் காரணமாவது தெரியுமா ? அதுவும் மாற்றான் மனைவியை இராவணன் தொட ஆசைப்பட்டதால் தான் "

"உனக்கு இந்தக் கதைகள் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆயினும் என்னை அபகரிக்க முயல்கிறாயே. உனக்கு என்னைப்போல பெண் தங்க்கையாக இல்லையா ? உன்னைப் பெற்றவளும் பெண்ணல்லவா "

ஊர்மிளையின் கண்கள் கண்ணீரைக் கடலென சிந்துகிறது உறக்கத்தினின்று விழிக்காத அவள் முகத்தில் அச்சம் குடிபுகுந்ததால் முகம் கருத்துக் கிடக்கிறது.

" பெண்ணே, நான் இராமனின் தம்பி "

" இராமனா.. அந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதே இலை "

" ஜனகனின் மருமகன் நான் "

" யார் அந்த ஜனகன் ? என்னிடம் ஏன் அவர்களைப் பற்றி சொல்கிறாய். அய்யகோ என் பிறந்த குலத்தின் பெருமையும் புகுந்த வீட்டின் பெருமையும் என்னால் நாசமாகும் போல இருக்கிறதே. உதவிக்கு யாருமே இல்லையா "

" பெண்ணே, நீ திருமகளைப் போன்றவள். என்னை ஆளப் பிறந்தவள் அல்லவா. நான் சீதையின் மைந்தனொத்த மைத்துனன். "

" என்ன பிதற்றுகிறாய்.. யாரது சீதா ? "

இலக்குவன் முகம் சோகத்தின் உச்சிக்கு சென்றது. இவள் என்னை பழி வாங்குகிறாளோ ? இப்படி பேசக் காரணம் என்ன ? ஓயாத தூக்கம் இவளை பித்தாக்கி வைத்திருக்கிறதோ ?

" நான் சீதையின் மைத்துனன் இல்லையா ? நீ ஊர்மிளை இல்லையா ? என்னிடம் பொய்யுரைக்காதே ஊர்மிளா.. சோதித்தது போதும் எழுந்திரு. உனக்கு சொல்கிறேன் கேள். நாங்கள் வனவாசத்தில் இருந்த போது சீதையை தூக்கிச் சென்று விட்டார்கள். நாங்கள் போராடி அன்னையை மீட்டு வந்திருக்கிறோம். இராவணனை கொன்று திரும்பி இருக்கிறோம்.

நீ என்னை ஏற்காவிடில் இந்த ஊர் உலகம் என்னைத் தூற்றும். அது எப்போதும் அப்படித்தான் தெரியுமா.. யாரையும் நம்பாது.. தூற்ற ஏதோ காரணம் அதற்கு தேவை . அதனால் நான் அதற்குக் கவலைப் படவில்லை. ஆனால் உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை நான் ஊணுறக்கம் தவிர்த்து உன் நினைவாகவே இருக்கிறேன். இப்போது நீ உறக்கத்தினின்று எழுந்து என்னை ஏற்காமல் போனால் நான் இருந்தென்ன பயன் "

இலக்குவன் தன் வாளை உருவினான். தன்னை மாய்த்துக் கொள்ள தயாரானான்.

வாளின் ஒலி அவளை உலுக்கியது. ஊர்மிளை அதிர்ச்சியடைந்தாள் தன் தூக்கத்தினின்று விடுபட்டாள். பயத்துடனே இலக்குவனைப் பார்த்தாள். யாரென்று இலக்குவனைக் கண்டதும் அவள் பயம் விலகியது. இலக்குவனின் காலைப் பணிந்தாள்.

இலக்குவன் மகிழ்வோடு கண்களில் நீர் தாரைத்தாரையாய் வழிய ஊர்மிளையை மலர்மாலையை எடுப்பது போல் எடுத்து அணைத்தான். அந்த அணைப்பு பதினான்கு வருட பிரிவின் ஏக்கத்தை ஊர்மிளைக்கு உணர்த்தியது.

இலக்குவன் ஊர்மிளையின் கண்ணீரைத் துடைத்தான்.

"என் தந்தை ஏமாந்துவிட்டார். அவருக்கு உண்மை புரிந்திருக்கவில்லை. தங்களை உயர்ந்த நிலையில் வைத்துப் பார்த்துவிட்டார். ஆனால் உண்மையில் உங்கள் மனைவியை நீங்கள் பொருட்டாகவே கருதவில்லையே. உங்கள் அண்ணனும் அண்ணியுமல்லவா உங்களுக்கு முக்கியம்"

இலக்குவன் ஊர்மிளையின் இயலாமையால் வந்தக் கோபத்தைக் கண்டு உள்ளம் குமுறினான். அவள் கூறிய உண்மை வார்த்தைகள் அவனைச் சுட்டன

இந்த பதினான்கு வருடத்தில் நான் உண்ணவில்லை உறங்கவில்லை. உனக்காக உயிர் தாங்கிக் கிடந்தேன் இதை எப்படி உன்னிடம் நான் நிரூபிக்க ? எதன் மீது ஆணையிட்டு உன்னை நம்பச்செய்வேன் ?. போன பிறவியில் நாம் யாரோ நல்ல இணையை பிரித்திருக்க வேண்டும். அந்தத் தீவினையே நம்மை இப்போது பாடாய் படுத்துகிறது. இப்போது வருந்தி என்ன முன்பிறவிப் பயன் அனுபவித்தே ஆகவேண்டும் " தாளாத் துயரத்தில் விசும்பினான் இலக்குவன்.

அதற்குள் பணிப்பெண்கள் மூலம் கோசலைக்கு விபரம் தெரிந்து அவள் உடனடியாக அந்தப்புரம் வந்து சேர்ந்தாள். தாயைக் கண்டதும் இருவரும் எழுந்து நின்றனர். பின் தாயின் காலில் விழுந்து வணங்கினர்.

கோசலை ஊர்மிளையை இறுகத் தழுவினாள். உச்சி மோந்து முத்தமிட்டாள். இருவரையும் குளிக்கப் பணித்தாள். இருவருக்கும் அழகான உடைகளையும் ஆபரணங்களையும் அளித்தாள். அதற்குள் இராம இலக்குவர்களின் தங்கையான சாந்தாவும் அங்கு வந்து சேர்ந்தாள்.

" பதினான்கு வருடம் உண்ணாமல் உறங்க்காமல் இருந்தாய் இல்லையா இப்போதாவது மனைவியோடு நன்றாக உணவருந்து அண்ணா " என்றாள் சாந்தா. தயரதனின் புதல்வி.

இருவரும் சாப்பிட்டு முடித்து தாம்பூலம் தரிக்கையில் சாந்தா ஊர்மிளையை கேலி செய்தாள்.

" யாரோ பதினாலு வருஷம் தூங்கிக் கொண்டே இருந்தார்கள். பாருங்களேன் அண்ணி "

சீதாவை சாந்தா அழைத்தாள்.

" இந்த பொன்னிற சிரிப்பையும் முக வடிவையும் இவள் இத்தனை நாளாய் எங்கே தான் ஒளித்து வைத்திருந்தாளோ. கண்ணேறு அதிகமம், அம்மம்மா கடவுளுக்கு நாம் பூஜை செய்ய வேண்டும் அண்ணி "

சீதை குறும்பு நகையுடன் சாந்தாவுடன் சேர்ந்து கேலி செய்ய ஆரம்பித்தாள்

" ஆமம்மா ஆம். ஆனால் கண்ணேறு கழிக்க வேண்டியது உன் அழகு அண்ணனுக்கு நமக்கல்ல "

" ஆஹாஹா.. நீங்கள் அக்கா தங்கையர் நால்வரும் அல்லவா அழகால் வலை வீசி என் சகோதரர்களை வளைத்துவிட்டீர்கள். ஆகவே உங்கள் கண்களில் இருந்து தான் திருஷ்டி பட்டிருக்கும். "

" இருக்கும் இருக்கும் .. ஒண்ணும் தெரியாத சாந்தா என்னும் பெண் தான் என் சகோதரன் ரிஷ்ய சிருங்கனைத் தன் அழகால் கட்டிப் போட்டாளாக்கும். அவர் பாவம் காட்டில் சிவனே என்று தவம் செய்து கொண்டிருந்தார். அவரைப் போய்.. "

" அம்மா தாயே.. நீ செல்வத்தின் திருமகள் அல்லவா.. அங்கே மேல் உலகத்தில் இருக்கப் பிடிக்காமல் இங்கே எங்களுடன் இருப்பது எங்கள் பாக்கியம் "

கண்கள் பணிக்க சீதையின் கையைப் பற்றினால் சாந்தா.

" அசடே.. நீ எங்களுடன் இருப்பது தான் எங்களின் பாக்கியம் " சீதை சாந்தாவை அணைத்து முத்தமிட்டாள்.

சுமத்திரை மென் பூக்களாலும், நறுமணங்களை நிரப்பியும் படுக்கை அறையை தயார் செய்து விட்டு இருவரையும் அறைக்குள் தள்ளி கதவை சாத்தினார்கள்.

ஒருவரை ஒருவர் விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அழுதனர், சிரித்தனர். ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பின்பு சேர்ந்து காரணமே இல்லாமல் அமைதியாயினர். கண்கள் மட்டுமே பேச வாய் மௌனித்தது. இவர்களின் தனிமைக்கு குறுக்கே நான் யார் என்று நிலவொளி மங்க, அறை ஒளியும் மங்க.. நித்திரை தேவி யாரை பீடிப்பது என்று தெரியாமல் அவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்களின் உறக்கம் சற்றே தள்ளிப் போகட்டும் என்று மிக மகிழ்வாக அறையின் வெளியே காத்துக் கொண்டிருக்கிறாள்.

Leave a reply