நேர்காணல்
சிந்தனை சார்ந்த செயல்பாடுதான் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்

அப்பாவைப் பத்திச் சொல்லணும்னா, அவங்க ரொம்ப பெரிய குடும்பம். ஒன்றுபட்ட தஞ்சாவூர் ஜில்லா முழுக்க அப்பாவோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க இருந்திருக்காங்க. நிலபுலன்கள் ரொம்ப ஜாஸ்தி. தஞ்சாவூர் ஜில்லாவைப் பொருத்தவரை, நிறைய நிலம் உள்ளவங்க, கொஞ்சமா நிலம் உள்ளவங்கன்னு இருந்திருக்காங்க. பெரும்பாலும், நிலமே இல்லாதவங்கன்னு யாரையும் சொல்ல முடியாது. குத்தகைக்காச்சும் நிலத்தை வெச்சிருப்பாங்க. எல்லா ஊர்லயும் சொந்தக்காரங்க இருப்பாங்க.

திருவாரூர் பக்கத்துல இருக்கற காட்டூர் அப்பாவுடைய அம்மா, அவங்க அப்பாவோட தம்பிகள் இருந்த ஊர். தாத்தா எங்கிருந்து வந்தாங்கன்னா, அது ஒரு சுவாரசியமான கதை சொல்றாங்க. பட்டுக்கோட்டைதான் தாத்தாவோட அப்பாவின் சொந்த ஊர். பட்டுக்கோட்டையிலேயிருந்து ஒரு வண்டி, ஒத்த மாட்டு வண்டியைக் கட்டிகிட்டு தன்னோட அண்ணன், தம்பிக்கெல்லாம் சொத்தைக் கொடுத்துட்டு, அவர் சீர்காழிக்கு வர்றார். அவர் அப்போ வக்கீலுக்குப் படிக்கறார். ஒத்த மாட்டு வண்டியிலேயே கிளம்பி புறப்பட்டு சீர்காழிக்கு வர்றார். வர்ற வழியில காட்டூர்லதான் தங்கறார். அந்த இடத்தையே தன்னோட பேஸா (Base) உருவாக்கறார். அங்கயிருந்து சீர்காழியில கல்யாணம் பண்றார். மனைவி வர்றாங்க. மாமனார் தன் சார்பில ஒரு வீடு, ஒரு சுவர்க்கடிகாரம் ரெண்டும் கொடுக்கிறார்.

இவர் வக்கீல் தொழில் பண்ணி மாமனார் கிட்ட வாங்கின அந்த வீட்டுக்கான கடனை அடைச்சார். அப்பல்லாம் எல்லா வீட்டிலேயேயும் கணக்குப் பிள்ளை இருப்பாங்க. மேசைப்பெட்டி போட்டு கணக்கு எழுதுவாங்க. யாராயிருந்தாலும், எல்லாமே கணக்குதான். பையனா இருந்தாலும் கணக்குதான், அப்பாவா இருந்தாலும் கணக்குதான். மாப்பிள்ளையா இருந்தாலும் கணக்கு எழுதியிருப்பாங்க. இதுபோல மாமனார் கிட்ட வாங்கின கடனை அடைக்கிறார்.

அப்புறம் கிராமம் கிராமமா நிறைய நிலம் வாங்கறார் தாத்தா. அது எங்கெல்லாம் வாங்கறார்னா, திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி ஊருலேயிருந்து கிட்டத்தட்ட பட்டுக்கோட்டை வரை, தஞ்சாவூர் ஜில்லா பூரா எங்கெல்லாம் நிலம் கிடைக்குதோ அங்கெல்லாம் வாங்கறார். அவருடைய பசங்களில ஒரு பையன்தான் அப்பாவோட அப்பா. அவருக்கு அந்த ஊர்லேயே, அதாவது சீர்காழியில தாத்தாவுக்கு மாமனார் கொடுத்த வீடு அவரோட பாகமா வருது.. அதாவது என்னோட தாத்தாவுக்கு வருது. அதே வீடு என்னோட அப்பாவுக்கு வருது. அந்த வீட்லதான் அப்பா இன்னைக்கும் இருக்கார். தாத்தா கல்யாணம் பண்ணிட்டு வந்த சீர்காழி வீடுதான் அப்பா இப்போ இருக்கற இடம்.

ஒவ்வொரு முறையும் விதைக்கறதுக்கு, அறுக்கறதுக்குன்னு வேற வேற கிராமங்களுக்குப் போவாங்க. பல இடங்களில நிலம் இருக்கற விவசாய குடும்பத்தை ஒரே ஊர்னு சொல்ல முடியாது. இங்கேயிருந்து நாகப்பட்டினத்துல அறுப்பு அறுக்கறாங்கன்னா, மூணு மாசம் அங்க போய் இருக்கணும். அங்க ஒரு தவசுப் பிள்ளை, அங்க ஒரு வீடு, ஆள், மாடு, கன்னுன்னு எல்லாம் ரெடியா இருக்கும். அதுமாதிரி திருநாரையூருக்குப் போனா அங்கயும் அதே போல மாடு, கன்னு, பாத்திரம், பண்டம் எல்லாம் இருக்கும். நீங்க எந்த ஊர்ல அறுப்பு, விதைக்கறதுன்னு நடக்குதோ அந்த ஊரை சார்ந்து போயிடுவீங்க. இதுதான் தஞ்சாவூர் ஜில்லா முழுக்க அப்போ இருந்த வழக்கம்.

நான் பிறந்தது ராஜ மன்னார்குடி. மன்னார்குடியில ராஜகோபால சுவாமி இருக்கறதால, ராஜ மன்னார்குடின்னு சொல்றோம். காட்டு மன்னார்கோவில்னு ஒரு ஊர் தென்னாற்காடு மாவட்டத்தில இருக்கு, எங்களுக்கு ரெண்டு இடத்துலேயும் நிலம் இருந்திருக்கு. அதனால குழப்பம் எதுவும் வரக்கூடாதுன்னு ராஜ மன்னார்குடின்னு சொல்றோம். இப்படிப் பல ஊர்களோட விவசாயத் தொடர்பு உள்ள குடும்பத்திலேயிருந்த வந்தால இந்த ஊர்தான் சொந்த ஊர்னு அடையாளப்படுத்திக்கறதுல சிரமங்கள் இருக்கு, ஏன்னா தென்னாற்காடுல ஆரம்பிச்சு கிட்டத்தட்ட பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வரைக்கும், இந்தப் பக்கம் தஞ்சாவூர் வரைக்கும் பரந்துபட்ட ஒரு நிலங்கள் உள்ள குடும்பம் எங்களுடையது. அப்போ நான் நினைக்கறது என்னன்னா, எங்கே பிறந்தேனோ அதான் என்னோட ஊர், அப்படிதான் சொல்லணும்னு நினைக்கறேன். அதனால நான் பிறந்த ராஜ மன்னார்குடியைதான் சொந்த ஊர்னு சொல்வேன். மன்னார்குடி அய்யான்னு தாத்தாவோட உறவினர், அவரோட வீட்லதான் பிறந்தேன். அவங்க இன்னும் இருக்காங்க, இப்போ சுமார் 102 வயசு இருக்கும். அங்க ஒரு கண் ஆஸ்பத்திரி இருந்தது. அங்கதான் பிறந்தேன். அதனால சொந்த ஊர்னு எப்பவும் எல்லா இடத்துலேயும் சொல்லிக்கறது ராஜ மன்னார்குடியைதான். மாயவரமோ, கும்பகோணமோ, சீர்காழியோ, காட்டூரோ, நாகப்பட்டினமோ, வேதாரண்யமோ, பட்டுக்கோட்டையோ எதையும் சொல்லறதில்லை. எல்லா இடத்துலயும் வீடு, போக்குவரத்துன்னு இருந்தாலும் அதையெல்லாம் சொல்ல முடியாது.

அப்பா விவசாயம்தான் பார்த்துட்டிருந்தார். திராவிட இயக்கத்து மேல ஒரு பெரிய ஈர்ப்பு அவருக்கு இருந்தது. திராவிட கழகத்தில இருந்துகிட்டே எம்ஜிஆர் மன்றம். அங்க இருந்துகிட்டே திராவிட முன்னேற்றக் கழகம்… இப்படி இருந்தாரு. எம்ஜிஆர் பிரிஞ்சு போன பிறகும் திமுக அனுதாபியாவே இருந்தார். அப்பா நிறைய படிப்பாங்க. மு.வரதராசன் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். வீட்ல ஒரு லைப்ரரி வெச்சிருந்தார். லைப்ரரின்னா ரெண்டு பெரிய மர பீரோ நிறைய புத்தகங்கள்சேகரிச்சு வெச்சிருந்தாரு. அதுல எல்லாமே இருந்துச்சு. மு.வ. மட்டுமில்லாம மஞ்சரி, கண்ணன், அண்ணாவோட புத்தகங்கள்,

அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள் இப்படிப் பல வித்தியாசமான கலவையோட புத்தகங்கள் அதில இருந்தது. அதே போல, அப்போ எல்லாம் திமுக மாநாடு நடந்தா மாநாட்டு மலர்னு புத்தகங்கள் வரும். அது எல்லாமே அப்பா வாங்கிடுவார். அதுவும் அந்த புத்தக அடுக்கில இருக்கும். அப்புறம் ‘மன்றம்’ பத்திரிகையிலயிருந்து வீட்டுக்கு வந்திருக்கு. அந்தப் பத்திரிகைகளோட தொகுப்பும் வீட்ல இருக்கும். எல்லாமே அப்பா வாங்கி சேகரிச்சது.

மன்னை நாராயணசாமி பரிந்துரை செஞ்சதன் பேர்ல, 1967இல் கலைஞர் அப்பாவை எம்.எல்.ஏ.வுக்கு தேர்தலில் நிக்கறயான்னு கேட்கறார். ஆனா அப்பா ‘இல்லைங்க, தேர்தல்ல நிக்கறதில எனக்கு விருப்பமில்லை’ன்னு சொல்லிடறார். நீங்க யாரை நிக்க வெக்கறீங்களோ அவரை ஜெயிக்க வெக்கறேன்னும் சொல்லிடறார். தொடர்ந்து இரண்டு மூன்று முறை தேர்தலில் நிற்கவும், அரசியலில் இறங்கவும் அப்பாவை நேரடியாவே கலைஞர் கேட்டிருக்கார். நேரடி கள அரசியலில் இறங்கலைன்னாலும், கொள்கை சார்ந்து, திமுக கட்சி சார்ந்தும், அண்ணா மீதும் பிடிப்பு கொண்டவராக அப்பா இருந்திருக்கார்.

வாசிப்பு, கலை இலக்கியம் சார்ந்த ஆர்வமும் ஈடுபாடும் அப்பாவுக்கு அதிகம் உண்டு. சூப்பரா எழுதுவாரு. நாலு வரி எழுதினாலும் அது நல்லாயிருக்கும். அப்பாவோட பேர் நடராஜன். என் தாத்தா பேர் சீனிவாசன். அதுதான் என்னோட பேரும். அப்படிதான் பெயர் வெக்கிற வழக்கம் அப்போ இருந்தது. குடும்ப பேர்லாம் பார்த்தீங்கன்னா சோமசுந்தரம், தியாகராஜன், நடராஜன் இப்படி திரும்பத் திரும்ப வரும். ஒரு சைவம் சார்ந்த குடும்பத்தோட பழக்கவழக்கம் இப்படியிருந்தது.

என்னோட மகனுக்கு அருண்மொழித்தேவன்னு பேர் வெச்சேன். அது சேக்கிழாரோட இயற்பெயர். சேக்கிழார் மேல தாத்தாவுக்கு ரொம்ப இஷ்டம், அந்த ஞாபகமாதான் பேர் வெச்சேன். சேக்கிழார் பேர்ல இரண்டு பள்ளிக்கூடங்கள், தலா அஞ்சு வேலி நிலம் கொடுத்து ஆரம்பிக்கச் செய்திருக்கிறார். இந்த மாதிரி, சேக்கிழார், சைவம் சார்ந்து இருந்த ஒரு குடும்ப அமைப்புதான் தாத்தா, அப்பா காலத்து அமைப்பு. யாருமே அதைக் கைவிடல. கூடுதலா அப்பா கிட்ட முழுக்க முழுக்க திராவிட இயக்கத்துடைய பெரிய பற்று, எப்பவுமே இருந்தது. இன்னைக்கு வரைக்கும் இருக்கு. இன்னைக்கும் முரசொலி அப்பாவுக்கு இலவசமா வந்துட்டிருக்கு. திராவிட இயக்கத்தோட மூத்த உறுப்பினர்களுக்கான ஒரு திட்டத்தின் மூலமா வருது. கலைஞர் தமிழ்நாட்டோட ஒவ்வொரு ஊர்லயும் இருக்கற மூத்த உறுப்பினர்களைப் பட்டியலிட்டு அவங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறார்.

திமுகவோட ஆரம்பகால உறுப்பினர்களிலே அப்பாவும் ஒருத்தர். ஆரம்பிச்ச காலத்துலேயே… வீட்டுல பொதுவா சைவம் ஒரு பக்கம் ஓடிட்டிருக்கும். தினமும் நாலு பேர் சாப்பிட்டுட்டு இருப்பாங்க. வீட்டுக்குப் பக்கத்துல குருபூஜை மடம் இருக்கும். அறுபத்தி மூன்று நாயன்மார்களுக்காக அறுபத்தி மூணு நாளும் ஏதாவது பூஜை அங்கே நடந்திட்டிருக்கும். நாலு பேர் தேவாரம் பாடிட்டு இருப்பாங்க. எல்லாம் தாத்தாவோட ஏற்பாட்டில. நடந்தது. சைவம் சார்ந்து அரசியல் சார்ந்துன்னு வீட்ல ஏதாவது நடந்துகிட்டேயிருக்கும்.

இந்தச் சூழல்லதான் வளர்ந்தேன். பெரிய அழுத்தமெல்லாம் கிடையாது. படி, பள்ளிக்கூடம் போ, இதைப் பண்ணு, அதைப் பண்ணு இப்படி எந்த கட்டுப்பாடும் கிடையாது. பொதுவா விவசாயக் குடும்பத்துல என்னன்னா, ஒரு பெருக்கல், ஒரு கூட்டல், ஒரு கழித்தல் இதைக் கத்துகிட்டா போதும். அதிகபட்சமா அது தெரிஞ்சா போதுங்கிற நிலைதான் இருந்தது. மனக்கணக்கை பாட்டிகிட்டேயிருந்து கத்துக்கலாம். கூட வேலை பாக்கிற வேலையாள் கிட்டயிருந்து இயல்பா கத்துக்கலாம். அவ்வளவுதான் சொல்லிக்கொடுப்பாங்க. அது இயல்பா கிடைக்கும்.

அப்புறம் நமக்கு எங்கெங்கே தோட்டம், நிலம் இருக்குன்னு தெரிஞ்சு வெச்சுக்கணும். இதுக்கு மேல ஒண்ணும் பெரிசா கத்துக்க வேண்டியிருக்காது. இப்படியிருக்கும்போதுதான் எனக்கு வந்து, கொஞ்ச கொஞ்சமா எழுத்துகூட்டிப் படிக்கற ஆர்வம் வருது. எழுத்துகூட்டிப் படிக்கற காலத்திலேயே எங்க வீட்ல இருந்த மஞ்சரி. பழைய கல்கண்டு அப்புறம் அந்த காலத்தில வந்த அம்புலிமாமா, முத்தாரம்னு படிக்க ஆரம்பிக்கறேன். வளர வளர இந்த வாசிப்பு அதிகரிச்சுட்டே போகுது.

ஒரு கட்டத்துல எனக்கு கோமல் சாமிநாதனோட சுபமங்களா இதழ் எனக்கு அறிமுகமாகுது. அப்பா வாங்கிட்டு வர்றார். அவருக்கு கோமல் சாமிநாதனை ரொம்பப் பிடிக்கும். கிட்டத்தட்ட 1989க்குப் பிறகுன்னு நினைக்கிறேன். வருஷம் சரியா நினைவில இல்ல. சுபமங்களாவைச் சொல்ல காரணம், திராவிட இயக்கப் பத்திரிகைகளிலேயிருந்து, கண்ணன், மஞ்சரி, அம்புலிமாமா வாசிப்பில இருந்து கடைசியா நான் அடைந்த இடம் அதுதான். வாசிப்பில நான் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது இப்படிதான். வீட்ல தினமணி தினமும் வரும்.

நான் எங்க ஊர்ல இருந்த அரசுப் பள்ளியில படிச்சிருக்கேன். அப்போ கான்வென்ட் அறிமுகமானதும் அங்கயும் கொஞ்ச நாள் படிச்சிருக்கேன். எங்களோட குடும்பத்தோட ஸ்கூலே இருந்தது. அங்கயும் படிச்சிருக்கேன். ஒரு ஸ்கூலா இல்ல எல்லாத்திலேயும் படிச்சிருக்கேன். ஒரு சுவாரசியமான விஷயம் என்னன்னா, சௌரிராஜன் ஹையர் செகண்டரி ஸ்கூல்னு ஒரு பள்ளி திருவிளையாட்டம் அப்படிங்கற ஊர்ல இருக்கு, அது சங்கரன்பந்தல் போற வழியில இருக்கு. அதுக்குப் பக்கத்துல எங்க பாட்டி ஊர் குறும்பக்குடி கிராமம் இருந்தது. லீவில அங்கு போவேன். ஒரு மாசம், ஒன்றரை மாசம் அங்கேயே தங்கிடுவேன். அப்ப பாட்டி, இவனையும் சேர்த்து பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிட்டு போங்கடான்னு சொல்வாங்க. அங்கயிருந்த சௌரிராஜன் ஸ்கூல்லயும் கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் எல்லா வருடமும் படிச்சிருக்கேன். பள்ளிக்கூடங்கறது இன்னைக்கு இருக்கறது போல பதிவேடா அப்போ இல்லை. யார் போனாலும் சொல்லிக்கொடுப்பாங்க. அது ஒரு ஜாலியான அனுபவம்னு சொல்லலாம்.

அப்போ எல்லாம், யாரு வந்தாலும் பாடம் சொல்லிக்கொடுப்பாங்க, யாரு வந்தாலும் சோறு போடுவாங்க, யாரு வந்தாலும் ஸ்கூல்ல பாடம் நடத்துவாங்கன்னு இருந்தது. திருவிளையாட்டம் சௌரிராஜன் ஸ்கூல் எல்லாம் என்னால மறக்க முடியாது. அதுமாதிரி பல பள்ளிக்கூடத்தில படிச்சிருக்கேன். அப்புறம் வைத்தீஸ்வரன் கோயில் அரசுப் பள்ளியில +1, +2 படிச்சேன். அப்போ அங்க மாணவர் தலைவரா இறுதி ஆண்டு இருந்தேன். படிப்பு என்னைப் பொருத்தவரை இரண்டாம்பட்சமாதான் இருந்தது. இன்னைக்கு நான் ரிசர்ச் பண்ணி விருதுகள் வாங்கினேங்கிறது வேற.

சீர்காழியில வீட்டுக்குப் பக்கத்திலேயே எங்களுக்கு சொந்தமா பெரிய குடோன் இருந்தது. பக்கத்திலேயே பஸ் ஸ்டாப். கடைக்காடு மா.சூரியமூர்த்தி அப்படின்னு ஒரு ஓவியர். அவர் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்ல பணிக்கர் பீரியட்ல படிச்சுட்டு தேசிய விருது வாங்கினவர். பிரின்சிபல் பணிக்கர், இவர் மாணவர். ரெண்டு பேரும் ஒரே நாள்ல தேசிய விருது வாங்கறாங்க. அவர் இந்தியாவில் முக்கியமான ஓவியர். பூம்புகாருக்குப் பக்கத்துல இருக்கற கடைக்காடு கிராமம்தான் அவர் ஊர். புஞ்சை முத்துசாமியோட ஊர், சாயாவனம் கந்தசாமியோட ஊர், பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம் கிருஷ்ணமூர்த்தியோட ஊர். இது மூணுக்கும் நடு மையமா இருக்கிற ஊர்தான் கடைக்காடு. அதுவும் கடற்கரை கிராமம்தான்.

ஓவியர் சூரியமூர்த்தியோட அப்பாவும் பெரும் பணக்காரர். ஏகப்பட்ட சொத்து அவங்களுக்கு. பெரிய மாளிகை, நிறைய நிலபுலன்கள் உள்ள குடும்பம். அவர் பஸ் ஏறி பயணம் போகும்போது எங்களோட குடோன்லதான் அவரோட லக்கேஜை போட்டுட்டுப் போவார். அவர் பீடி பிடிப்பார், அப்பா சார்மினார் சிகரெட் பிடிப்பாங்க. அப்பாவை சூரியமூர்த்திக்கு நல்லா தெரியும். சூரியமூர்த்தி பெரிய மீசை வெச்சு ஆஜானுபாகுவா இருப்பார். அப்பாவும் அப்படிதான் கம்பீரமா இருப்பார். ஆறரை அடி உயரம், கனமான சரீரம். ரெண்டு பேரும் நல்லா பேசிட்டிருப்பாங்க.

அப்ப நான் சின்னப் பையன். சும்மா படங்கள் வரையறேன்னு கிறுக்கிட்டிருப்பேன். சூரியமூர்த்தியைப் பாக்கறதுக்கு கொஞ்சம் பயமா இருக்கும். தோற்றத்தில கரடுமுரடான ஆளா இருப்பாரு. ஆனா அவரோட கையதான் இறுக்கமா பிடிச்சுகிட்டேன்னு சொல்லணும். ஓவியம் சார்ந்த பயணம் அங்கதான் தொடங்குச்சு. இந்த சூரியமூர்த்தி ஓவியரா அறியப்பட்டாலும், ஊர்ல அவங்களுங்குப் பேரு வர்ணக்காரர்கள். அதுக்குக் காரணம் அவங்க சுதை சிற்பங்கள் பண்றதை காலம் காலமா பண்ணிட்டு வந்த குடும்பம். சுதை சிற்பங்களுக்கு வர்ணம் பூசறது இதெல்லாம் அவங்களோட வேலையா இருந்தது. இன்னைக்கும் வண்ணக்காரர்கள் குடும்பம் நிறைய இருக்கு. வண்ணக்காரர்கள் அப்படிங்கறதே சுதை, வண்ணம் எல்லாம் சேர்ந்ததுதான்.

அப்படி வண்ணக்காரர் குடும்பத்துல சொக்கலிங்கம்னு ஒரு குடும்பம் அதுக்கு அடுத்த ஜெனரேஷன்ல சுந்தர் அப்படின்னு ஒருத்தர். காழி சுந்தர்னு சொன்னா தெரியும். காலண்டர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தார். இடது கையால வரையக்கூடிய ஓர் ஓவியர். சுவர்களிலெல்லாம் படம் வரைஞ்சிருக்கார். ராமேஸ்வரம் உட்பட நிறைய ஊர்ல அவர் வரைஞ்ச படங்கள் இருக்கு. திருவிளையாட்டம் பக்கத்துல குறும்பக்குடின்னு ஒரு ஊர். அங்க ஒரு கோயில் கட்டறாங்க. அதுக்குப் படம் வரையறாரு. அவரை அப்படியே பார்க்கிறேன், பிரமிப்பா இருக்கு. இடது கையாலயே அவ்வளவு படங்களை பண்ணிட்டிருக்காரு. சும்மா ஒரு குச்சியை எடுத்து கொட்டாங்குச்சியில வண்ணத்தை வெச்சு வரைஞ்சிட்டிருக்காரு. வாஷ் பண்றாரு. பார்க்கும்போதே மேஜிக்கா இருக்கு. இதுக்கு முந்தி எழுத்து கூட்டியே வாசிச்சிட்டிருந்த விஷூவலான ஓப்பனிங் கிடைக்குது. இது எல்லாம் ஒரே நேரத்துல நடக்குது. சின்ன வயசிலிருந்தே எனக்கு ஓவியம், வாசிப்புக்கான தொடர்புகள் அங்கங்கே கிடைக்குது.

இன்னொரு விஷயம் என்னன்னா காழி சுந்தர் வீடு என் வீட்டுக்குப் பின்னாலேயே இருந்தது. அங்க போவோம், சும்மா பேசிட்டிருப்போம். அவர் ரொம்ப சீக்கிரமே இறந்துடறாரு. நான் சந்திச்சு ரெண்டு வருஷத்துக்குள்ள இறந்துட்டாரு. அவருடைய தம்பி பையன் எம்.சி.எஸ்.சேகர். எனக்கும் சேகருக்கும் ஒரே வயசுதான். குடும்ப முறைப்படி அந்தத் தொழிலை அவரும் பண்ண ஆரம்பிக்கிறார். எல்லா கோயில்லயும் ஒரு முறை வெச்சிருப்பாங்க. அதுபடி, வெற்றிலை பாக்கு, பழம் வெச்சு, கோயிலுக்கு பாலாயணம் பண்ணுவாங்க. அந்த முறைபடி வண்ணக்காரரைக் கூப்பிடுவாங்க. அதை பண்ணாதான் இவங்க சாப்பாடு, சமையல் எல்லாமே. சேகர் எனக்கு நெருக்கமான நண்பர்.. அப்பப்ப நான் அவர் வீட்டுக்குப் போறது, படம் வரையறதைப் பாக்கறதுன்னு போயிட்டிருந்தது.

ஸ்கூலைப் பொறுத்தவரைக்கும் அங்கேயும் ஓவிய வகுப்பு, ஓவியம் வரையறதுன்னு இருந்தது. அப்ப, ராகவன் ஐயங்கார்னு ஒருத்தர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரிய நிலக்கிழார். அவருக்கு அஞ்சு பசங்க. ராமன், லக்ஷ்மணன், பரதன் அப்படின்னு வரிசையா பேர் வெச்சிருப்பாங்க. அதுல லக்ஷ்மணன்கிற பையன், டிவிஎஸ் 50 வந்த புதுசுல, அதுல போகும்போது கடைத்தெருவுல ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துடறான். நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்லதான் படிக்கறோம். என்னைவிட அவன் ரெண்டு வருஷம் சீனியர். அவனோட தம்பி பரதன். என் கூட படிக்கிறான். அவங்க அஞ்சு பசங்கன்றாதல அடுத்தடுத்த கிளாஸ்ல பசங்க இருப்பாங்க.

அப்போ நான் ஒரு சின்ன நோட் புக் வெச்சிருப்பேன். அதுல எதாவது ஸ்கெட்ச் பண்ணிட்டேயிருப்பேன். அந்த லெட்சுமணனும் ஒரு நோட் புக் வெச்சிருந்தான். அதுல படம் வரைஞ்சிட்டேயிருப்பான். என்னோட நோட் புக்கை வாங்கி அவன்தான் திருத்தி கொடுப்பான். அவனோட நோட்டை என்கிட்ட கொடுப்பான். அதைப்பார்த்து, வரைஞ்சி பாருடான்னு சொல்லுவான். அவன் செத்துப்போன போது அவனோட நோட் என்கிட்ட இருந்தது. இப்பவும் அந்த நோட் புக்கை வெச்சிருக்கேன். இது நான் ஆறாவது படிக்கும்போது நடந்தது/

அப்போ பூலான்தேவியோட கதை ராணியில வருது. படக்கதையா வருது. நாங்கல்லாம் திருட்டுத்தனமா அதைப் படிப்போம். ஏன்னா அது இம்மாரலா இருக்கும்னு பெரியவங்க படிக்க விடமாட்டாங்க. அப்படி படிக்கறப்ப ஒருமுறை கிளாஸ்ல மாட்டிகிட்டோம். இது நடந்து கொஞ்ச நாள்லதான் லக்ஷ்மணன் இறந்துடறான். அந்த நோட் புக் என்கிட்ட இருந்தது. இதுதான் எனக்கான பெரிய சேஞ்ச். நான் ஆர்ட், விஷூவல் அது தொடர்பான விஷயங்களில எனக்கிருந்த சிறு வயது அனுபவம். அதுக்கப்பறம் எனக்கு சரியான கைடன்ஸ் இல்ல. ஸ்கூல்ல வரையறது சொல்லித்தர சீனியர்களும் யாரும் இல்ல.

அதுக்கப்பறம்தான் சூரியமூர்த்தி, காழி சுந்தர்னு தெரிய வர்றாங்க. எல்லாம் பெரிய ஆளுங்க. இவங்ககிட்ட ஒண்ணுமே கேக்க முடியாது. அவங்க என்ன செய்யறாங்கன்னு வேடிக்கைப் பார்க்கலாம். அவ்வளவுதான். லக்ஷ்மணன் இறந்த அதிர்ச்சியிலயிருந்தும் கொஞ்சநாள் மீள முடியலை. அப்போ இந்தி டியூஷன் போவோம், மாடு மேய்ப்போம் எதாவது பண்ணிட்டிருப்போம். ஆனாலும் படமும் வரைஞ்சிட்டிருப்பேன். அப்புறம் கோயில் படங்கள் வரையறவங்க அவங்க கூட போறது, அவங்க வரையறதைப் பாக்கறதுன்னு கொஞ்ச நாள் போச்சு. கூடவே சூரியமூர்த்தியும் இருக்கறார்.

இதுதான் ஆரம்ப காலம். சரியாச் சொல்லணும்னா, 1980 நாடாளுமன்றத் தேர்தல்ல ‘நேருவின் மகளே வருக‘ன்னு திமுக கூட்டணியமைக்கிறதுக்கு முன்பான காலம்.. ஏன் குறிப்பிட்டுச் சொல்றேன்னா, தேர்தலுக்காக சுந்தர், பசுவும் கன்றும் சின்னத்தை படம் வரையறாரு. அப்போல்லாம் நான் அவர் கூட இருக்கேன். அடுத்த தேர்தலின்போது அவர் இல்லை, இறந்துடறாரு. அது என்னோட ஞாபகத்துல பதிவாகியிருக்கு. பசுவும் கன்றும் சின்னம் வெறும் நீலக்கலர்ல வரையறார். தண்ணியில நனைச்சுட்டா லைட் ஷேட், நனைக்கலன்னா டார்க் ஷேட். வரையறது, வண்ணத்தோட வாசனைன்னு அது ஒரு மெஸ்மரைசிங்கா இருக்கும். அவர் ஸ்கெட்செல்லாம் போட மாட்டார். அப்படியே பிரஷ்சை எடுப்பார். கடகடன்னு வரைஞ்சிடுவார். ஒரு மாடு கன்னுக்குட்டியை நக்கிக்கொடுக்கிற மாதிரியான படம் அது. அவ்ளோ பிரமிப்பா இருக்கும்.

அதுக்கப்பறம் வரையறது, படிக்கறது, படிக்கறதுன்னா ஸ்கூல் புக் இல்லாம கதைப் புத்தகம் படிக்கறது இப்படியே தொடர்ந்தது. அப்பதான் ஒரு பெரிய சைஸ் புத்தகம் ஒண்ணு… கண்ணனான்னு தெரியலை, ஆனா அதுதான்னு நான் நினைச்சிட்டிருக்கேன். சரியா தெரியலை. ‘திருடன் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடினான்’ அப்படின்னு இருந்தா,‘ ‘திருடன்’ங்கறது தமிழ் வார்த்தையா இருக்கும். ‘சங்கிலி’ அறுக்கறதுக்கு ஒரு படம் போட்டிருப்பாங்க. அந்த கதையைப் படிக்கறேன். அப்புறம் மொழியையும் காட்சியையும் ஒண்ணா சேக்கறதுன்றது எனக்கு நல்லா பதிவாச்சு.

அதேபோல, மொழி, காட்சி சேர்ந்தாப்போல குட்டிகுட்டியா படங்கள், வாக்கியங்கள்னு தொடர்ந்து உருவாக்கிட்டேயிருந்தேன். என்பி பபிள்கம்ல வர்ற ஸ்டிக்கர்ஸை பார்த்து படம் வரைவேன். பூந்தளிர், அம்புலிமாமா, ரத்னபாலா இதெல்லாம் படிப்பேன். அதுல வர்ற காமிக்ஸைப் பார்த்து படம் வரைவேன். இதுகூடவே பாலஜோதிடமும் படிப்பேன். எண்கள்னு ஒரு பத்திரிகை, முத்தாரம், கல்கண்டு எல்லாம் படிப்பேன். அப்போ எல்லாம் ஒரு கலக்டிவான ஆளாவும் இருந்தேன். படம் வரையறதுதான் ஒரே ஒரு நோக்கமான விஷயமாக இருந்தது. அதுகூடவே சேர்ந்து மத்த எல்லாத்தையும் பண்ணிட்டிருந்தேன்.

தினமும் ஒரு பத்து பேப்பர் வரை வீட்டுக்கு வரும். முஸ்லிம் முரசுலயிருந்து, எல்லாமே வரும். எல்லாத்தையும் படிப்பேன். வேற வேலை ஒண்ணும் கிடையாது. பள்ளிக்கூடம் போறதுலாம் பெரிய வேலையே கிடையாது. பள்ளிக்கூடம் போவலன்னாலும் யாரும் எதுவும் கேக்கப் போறதில்ல. டியூஷன்னு சேர்த்துவிடுவாங்க. அந்த வாத்தியார்தான் மிரட்டி, அடிச்சு எதையாவது கத்துக் கொடுப்பாரு. ஆனா அதுக்கெல்லாம் பெரிய பயம் இல்ல. நல்லா ஊர் சுத்திருட்டிருப்பேன்.

இப்படியான நேரத்துல சூரியமூர்த்தி மூலமா, லலித்கலா கான்டெம்ப்ரரி புத்தகமெல்லாம் அறிமுகமானது. அவர் டெல்லி போயிட்டு வரும்போது நிறைய ஓவியம் தொடர்பான புத்தகங்கள் கொண்டு வருவார். அது ஆங்கிலத்துல இருக்கும். சத்தியமாக ஒரு வார்த்தை கூட அதுல அப்போ படிக்கத் தெரியாது. கான்வென்ட் ஸ்டூடன்ட்தான். ஆனா ஒண்ணுமே புரியாது. எத்தையோ படிச்சு, படங்களைப் பார்த்து பிம்பம் வெச்சு வரைய ஆரம்பிச்சுட்டேன். சூரியமூர்த்தி ‘‘என்னடா, என்ன படிச்ச நீ’ன்னு கேள்வி கேப்பார், மிரட்டுவார். அதுக்காகவே ஒரு இங்கிலிஷ் டீச்சர்கிட்ட போய்க் கேட்டு அதுல என்ன இருக்குன்னு கேட்டுத் தெரிஞ்சு வெச்சுக்குவேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா டெம்பிள் பெயிண்டிங் கத்துகிட்டேன். நானே ஸ்கெட்ச் பண்ணுவேன், வாஷ் பண்ணுவேன். இதெல்லாம் நடக்கும்போதுதான் முழுக்க முழுக்க கான்டெம்ப்ரரியை பத்தி எனக்கு ஒரு அபிப்ராயம் வருது. விஷூவல் ஆர்ட்லதான் முதல் முதல்ல வருது. விஷூவல் ஆர்ட் டாக்குமெண்டரி பார்க்கற வாய்ப்பு எனக்கு கிடைச்சது. அடிக்கடி மெட்ராஸ் வருவேன். ராதாகிருஷ்ணன் ரோட்ல மாமா வீடு இருந்தது. இப்பவும் அங்கதான் இருக்காங்க.

ஊர்ல, முஸ்லிம்கள், பரதவர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிருப்பாங்க. ஊருக்குத் திரும்பி வரும்போது அவங்க சென்ட் பாட்டில், ஆடியோ கேசட், விஎச்எஸ் மாதிரியான வெளிநாட்டுப் பொருள்கள் கொண்டு வருவாங்க. 1980களில நிறைய போராட்டங்கள் பண்ணியிருக்கோம். அதுல மிகப்பெரிய போராட்டம் ஈழப்போராட்டம், ஜெயவர்த்தனேவுக்கு பாடை கட்டி செருப்பால அடிக்கற போராட்டம், ஈழப்போராட்டம், இப்படி மாணவர் இயக்கம் வலிமையா இருந்த காலம் அது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் கூட பண்ணியிருக்கோம். கூடங்குளம் போராட்டம் அப்பவே, 1987லயே இருந்துச்சு. ஊர்வலமெல்லாம் போயிருக்கோம். பொதுமக்களிடமிருந்து காசு, துணிமணிகள் வசூல் பண்ணிக் கொடுக்கறது இதெல்லாம் பண்ணுவோம். எல்லாம் திமுக அமைப்பு சார்பா பண்ணிய வேலைகள்தான். அப்பா திமுக அப்படிங்கறதால முழுக்க முழுக்க திமுக நடத்திய போராட்டங்கள், பணிகளிலதான் பங்கேற்றோம்.

அப்போ மதுரையில டெசோ மாநாடு நடந்தது. நான் போயிருந்தேன். மாணவர்களோடு சேர்ந்து நானே ஒரு பஸ் ஏற்பாடு பண்ணி போனோம். மழை பெய்யுது தமுக்கம் மைதானத்துல. ஒருத்தர் கூட அசையலை. அப்படிலாம் ஒரு போராட்ட ஆதரவு காலம் இருந்தது. இது எதுக்குச் சொல்ல வந்தேன்னா, விஎச்எஸ் வந்த சமயத்துல, எங்க ஊரு, பக்கத்துலயிருந்த திருமுல்லைவாசல் இந்த மாதிரியான ஊர்களில முஸ்லிம்கள் ஃபாரின் போய் சம்பாதிச்சுட்டு வர்றது, வாராவாரம் ஒருத்தர் வெளிநாட்டுலயிருந்து லீவுக்கு வர்றதுன்னு நடக்கும். வெளிநாட்டுலயிருந்து நிறைய பொருள் கொண்டு வருவாங்க. சென்ட் பாட்டில், 60, 90 கேசட், மஸ்லின் துணி, பவுடர், டிவி, நெயில் கட்டர், வாக்கர் செருப்பு, தைலம், விஎச்எஸ் கேசட்னு வரும். அதையெல்லாம் வித்துப் பணமாக்குவாங்க. இதை பெட்டி உடைக்கறதுன்னு சொல்வாங்க. இந்த மாதிரி பொருட்கள் வரும்போது புது கேசட்டுகளோட பதிவான கேசட்டுகளும் சிலது வரும். பதிவான கேசட்ல பெரும்பாலும் செக்ஸ் படங்கள் இருக்கும். அப்புறம் ஈழப்போராட்டங்கள் பத்தின செய்தி, படங்கள் உள்ள கேசட் வரும். இது இங்க கிடைக்காது, பார்க்கவும் முடியாது.

இதுமாதிரி வந்த கேசட்டுல ஒருமுறை பிக்காசோ பத்தின கேசட் வந்தது. அவரைப் பத்தின டாக்குமெண்டரி அது. அப்படி கிடைக்கறது தெரிஞ்சதும் நாங்க யாரைப்பத்தியெல்லாம் கேசட் வேணுமோ அதை வாங்கிட்டு வரச் சொல்ல ஆரம்பிச்சோம். அவங்களுக்கு அதெல்லாம் யார்னே தெரியாது. சூரியமூர்த்தி மூலமா தெரிஞ்சுக்கற உலக ஓவியர்கள் பேரையெல்லாம் எழுதிக் கொடுத்து அனுப்பிடுவோம். ஐரோப்பாவுலயிருந்து வளைகுடா நாடுகளுக்கு வந்து அங்கிருந்து எங்களுக்கு இவங்க மூலமா வந்து சேரும்.

வீட்ல கலர் டிவி இருந்தது. அதுல போட்டு பார்ப்போம். ரூபவாகினி வர்றதுக்கு முன்னயே வீட்ல டிவி இருந்தது. அப்போ எல்லாம் டிவி ஆண்டனா தென்னை மரம் உயரத்துக்கு போடணும். கவாஸ்கருக்கு ஈடன் கார்டன்ல செருப்பு மாலை போட்டதையெல்லாம் நான் அந்த டிவியில பார்த்திருக்கேன். 60 ஓவர் கிரிக்கெட்லாம் பார்த்திருக்கேன். இப்படி, டிவியிலதான் டாக்குமெண்டரிகள் பார்க்க ஆரம்பிக்கறோம்.

ஜாக்சன் போலாக்னு நினைக்கறேன், அமெரிக்க அப்ஸ்ட்ராக்ட் ஓவியர். அந்த டாக்குமெண்டரி பார்த்தோம். இப்படி நிறைய படங்கள் பார்த்தோம். எங்களுக்கு சீனியரா நிறைய அண்ணன்கள் இருந்தாங்க. எங்க பெரியப்பா பசங்களுக்கு டி.ராஜேந்தர் கிளாஸ்மேட். ராஜேந்தருக்கு சாப்பாடுல இருந்து எல்லாம் வாங்கித் தருவாங்க. பாட்டுப் பாடுவாங்க. ராஜேந்தர்லாம் எங்க ஊருக்கு வந்திருக்காங்க. அவரோட லவ்வர் எங்க ஊர்தான். அதுபோல பேச்சாளர்கள் நிறைய பேர் எங்க வீட்டுக்கு வராம போனதே கிடையாது. நன்னிலம் நடராசன்லயிருந்து, சிதம்பரம் ஜெயவேல் இப்படிப் பலபேர். ராஜேந்தர் மாதிரி சினிமா ஆர்வம் உள்ள பலர் எங்க வீட்டுக்கு வருவாங்க.

இவங்க எல்லாரும் சேர்ந்து தீவிரமா பேசிட்டு இருப்பாங்க. கஞ்சா குடிச்சிட்டே பேசுவாங்க. சீர்காழியில காந்தி பூங்கான்னு ஒரு இடம். அங்க ஒரு கொட்டா இருக்கும். அங்க உக்கார்ந்து பேசுவாங்க. புரியும் புரியாது நாங்க கேட்டுட்டு இருப்போம். அது எந்த நோக்கமும் இல்லாத பேச்சா கூட இருக்கும். அது ஒரு சந்தோஷமான திருப்தியான விஷயமா இருந்தது. எதை நோக்கிய குறிக்கோளான விஷயமாவும் அந்த பேச்சு, செயல்கள் இல்லை. கேமரா இருக்கும். அதை வெச்சு போட்டோ எடுத்துட்டு இருப்போம். டிவியில படம் பார்ப்போம். யாராவது சிகரெட் பிடிப்பாங்க. நமக்குத் தோணினா நாமளும் சிகரெட் பிடிக்கலாம். யாராவது பேசிட்டிருப்பாங்க, நாம வேணும்னா கலந்துக்கலாம், இல்ல வேடிக்கை பார்க்கலாம். தூங்கலாம், என்ன வேணும்னாலும் செய்யலாம். எந்த கம்பல்ஷனும் இல்லை. அவனா மோட்டிவேட் ஆகி எதாவது பண்ணாதான் உண்டு. யாரும் படி, வேலைக்குப் போன்னு சொன்னதில்ல.

படிப்பு சார்ந்து இல்லாம பொதுவா வாசிக்கறதும், படம் வரையறதும் ரொம்பப் பிடிக்கும். படம் வரையறவங்களா போய் தேடித்தேடி பாக்கறது. அப்படிப் பார்த்தா தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், சிதம்பரம்னு ஊர் ஊரா யாரெல்லாம் படம் வரையறாங்களோ அவங்களையெல்லாம் போய் பார்ப்பேன். அவங்களோட பேசிட்டு, அவங்க படம் வரையறதைப் பார்த்துட்டு, அவங்களுக்கு படம் வரையறப்ப கூட எதாவது உதவி செஞ்சுட்டு இப்படியே ஊர் சுத்த ஆரம்பிச்சு டிராவலரா மாறிட்டேன். வாசிக்கறது, படம் வரையறது, டிராவல் பண்றது இதுக்குள்ளதான் என் லைஃப்னு ஒரு வடிவத்துக்குள்ள வந்துட்டேன்.

அப்போ எல்லாம் ஓவியக் கல்லூரியில சேர்றதுக்கு பத்தாவது படிச்சா போதும். செத்த காலேஜ், உயிர் காலேஜ் போல இதை பொம்மை காலேஜ்னு சொல்வாங்க. முதல்ல எட்டாவது படிச்சாலே பொம்மை காலேஜூக்கு போதும்னு இருந்தது. அப்புறம்தான் பத்தாவதா ஆச்சு. ஓவியக் கல்லூரிக்கு முயற்சி பண்ணப்ப கும்பகோணத்துலயும் கிடைச்சுது, சென்னையிலயும் கிடைச்சுது. பன்னிரெண்டாவது படிச்சுட்டு சென்னையில வந்து சேர்ந்தேன். நம்ம சந்துரு இருக்காண்டா., சென்னையிலேயே சேர்ந்துடுன்னு அப்பா சொன்னார். சந்துரு அப்பாவுக்குப் ஃபிரண்டு. அதனால இங்க சேர்ந்தேன். எனக்கு ஏற்கனவே போர்ட்ரெயிட், ஃபுல்ஃபிகர் எல்லாம் வரைய தெரியும். இங்க ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்போ அல்பான்சோ, ஆன்டனிதாஸ், சந்தானராஜ், கன்னியப்பன், பாஸ்கரன், ராமன்னு பலர் இருந்தாங்க.. இவங்க யாருமே சோடை போனவங்க கிடையாது, எல்லாடம் பெரிய ஆளுங்க. நீங்க சார்கோல் கொடுத்தா நாங்க கரிக்கட்டையில வரைவோம். டெம்பிள் ஆர்ட் அப்படிங்கறதே, கரியை எடுத்து முதல்ல சுவத்துல வரையறதுதான். அகாடமிக் ஸ்டைல் பொறுத்தவரை சார்கோல், ஆயில் ஆன் கேன்வாஸ், கொலாஜ், லைஃப் மாடல், ஸ்டில் லைஃப், போட்டோகிராபி, ஆர்ட் அப்ரிஷியேஷன் இதெல்லாம் எடுத்துகிட்டேன். உண்மைய சொல்லணும்னா இது எல்லாமே ஏற்கெனவே தெரிஞ்சதுதான். கிட்டத்தட்ட ஏற்கெனவே என்னோட பிராக்டிஸ்ல இருந்த விஷயங்கள்தான். இங்க சார்கோல் அங்க கரிக்கட்டை, இங்க நியூஸ் பிரிண்ட் பேப்பர்ல வரையணும், அங்க சுவர்ல வரைவோம். இவ்வளவுதான் வித்தியாசம். வேற ஒண்ணும் இல்ல.

காலேஜ் ஜாயின் பண்ணதும் அந்த சூழல் நல்லாயிருந்தது. நடேஷ் இருந்தார், கோணங்கியும் அங்க வருவார். காலேஜ் ஜாலியாவும் இருந்தது. ரெண்டு நாள் ஐபிசி வகுப்புல உட்கார்ந்தேன். ஜி.ராமன்தான் கிளாஸ் எடுத்தார். கிளாஸ்ல படம் வரையறேன். ராணி ஆபிஸ்ல படம் கேக்கறாங்கடா, நீ வேணும்னா படம் வரையறியா பணம் கொடுப்பாங்கன்னு சொல்றார். சரின்னு சொல்லி ராணி ஆபிஸ் போய் படம் வரைஞ்சு கொடுப்பேன். பணம் தருவாங்க. அப்புறம், பனியன் கம்பெனியில லேபிள் பண்ண ஆர்டர் எடுத்தோம். அப்படி இப்படின்னு பல படம் வரையற வேலைகளை செஞ்சு பிறகு சினிமாவுக்கு வரையப் போனோம். காலையில காலேஜ் போவோம், மத்தியானத்துல வேலை செய்யப் போவோம். பெரும்பாலும் தெலுங்குப் படங்களுக்குதான் ஸ்டோரி போர்டு வரைவோம். அப்போ உபால்டு, ஈஸ்வர்னு சிலர் இருந்து வழிகாட்டினாங்க. என்ன வழிகாட்டினாங்கன்னா எங்க வேலை செஞ்சா காசு கிடைக்கும் கிடைக்காதுன்னு சொல்லிடுவாங்க.

வெளிப்படையா சொல்லணும்னா ஆர்ட்டை பொறுத்தவரை முதல் ஆண்டு, முதல் நாள்லயிருந்து பணம்தான். சும்மா யார்கிட்டயாவது படம் வரையற ஒர்க் கொடுக்க சொன்னா கொடுப்பாங்க. பணத்தைப் பொறுத்தவரை ஒரு கிரியேட்டர், விஷூவல் ஆர்ட்டிஸ்ட் கவலைப்படத் வேண்டியதில்லை. ஒரு போஸ்டர் கலர் வேலை தெரியுமா, என்னடா தெரியும் உனக்குன்னு கேப்பாங்க. எதனா சொல்லுங்கண்ணான்னா டக்குன்னு இந்தா இதை முடிச்சுக் கொடுத்துட்டு போன்னு அப்டின்னுவாங்க. போவும்போது 100 ரூபா கையில கொடுப்பாங்க. 100 ரூபாங்கறது அப்ப பெரிய காசு. அப்ப ஒரு எம்.சி. விஸ்கி முழு பாட்டிலே 130 ரூபாதான். நேரா ஒரு கல்யாணி பீர் வாங்குவோம், ஒரு குவார்ட்டர் எம்.சி. விஸ்கி வாங்குவோம். பீரை ஓபன் பண்ணி ஒரு வாய் குடிச்சுட்டு அதுல விஸ்கியை ஊத்துவோம். கட்டை விரலை வெச்சு ஒரு குலுக்கு குலுக்கிட்டு வாயில வெச்சோம்னா ஃபுல் ஏத்துதான். எடுக்கவே மாட்டோம். அந்த கேஸோட வயித்துக்குள்ள போயிடும். அதுக்கப்பறம் இந்த உலகமே உங்களோடதுதான்.

இதை எதுக்குச் சொல்றேன்னா, ஒரு கிரியேட்டர் அவனுக்கான உணவு, அவனுக்கான போதை, பணம் எல்லாமும் சுதந்தரமா தேடிக்க முடிஞ்சது. இதையே கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பின்னால போனோம்னா, கோயில் வேலை செய்யும்போது, கள்ளு, நல்ல மீன் சாப்பாடு கிடைக்கும். கறி கிடைக்கறது கஷ்டம். நல்ல தூக்கம், கோபுரத்தோட மேல ஏழாவது நிலையில சட்டையெல்லாம் கழட்டிப் போட்டுட்டு தூங்குவோம். காத்து அள்ளு அள்ளுன்னு அள்ளும். அதே மாதிரி அந்த வேலையிலயும் அது ரிஃப்ளக்ட் ஆகும்.

கூத்தியா வெச்சுக்கறதெல்லாம் ஸ்தபதிகள் கிட்ட சர்வ சாதாரணம். ஊருக்கு ரெண்டு வெச்சுக்குவாங்க. நிலபுலன், மாடு கன்னு எல்லாம் வாங்கிக்கொடுத்து ரெண்டு வீட்டை மெயின்டெயின் பண்ணுவாங்க. இது ரொம்ப சகஜமா இருந்தது. விஷூவல் ஆர்ட்டை பொருத்தவரை கிட்டத்தட்ட இதே நிலைதான் இருந்தது. ‘லிவிங் டு கெதர்’ முதல் முதல்ல ஆதரிச்சதே விஷூவல் ஆர்ட்டிஸ்ட்தான். அதுக்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். அப்ப, நீங்க எல்லாத்தையும் பிரேக் பண்றீங்கன்னு ஒரு விஷயம் இருக்கில்ல… அப்பாவோட அலமாரியிலயிருந்து புத்தகம் படிக்க ஆரம்பிச்சு அப்படியே லலித்கலா கான்டெம்பரரி உள்ள வந்து, அப்புறம் எண் கணிதம், பாலஜோதிடம் படிச்சு, மணியனோட இதயம் பேசுகிறது, ஞானபூமி, சுபமங்களா படிச்சு, இதையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு பெரியார், அண்ணாவைப் படிச்சு, எங்கோ ஒரு விஷூவல் ஆர்ட்டுக்குள்ள போயி சொந்த வாழ்க்கையையே உடைச்சிப் போடற ஒரு விஷயம் இருக்கில்லயா…. அதுதான் என்னோட டிராவல்.

பர்சனலா, சுபமங்களா இதழ்தான் என்னை வேற ஒரு பாதைக்குக்குக் கூட்டிட்டுப் போனது. அதை நிச்சயம் சொல்லணும். ஏன் சுபமங்களாவைச் சொல்றேன்னா, கிட்டத்தட்ட ஒவ்வொரு கலைஞனோட வாழ்க்கையையும் அது மூலமா படிச்சு தெரிஞ்சுகிட்டேன். எனக்கெல்லாம் ஒண்ணுமே தெரியாதுன்னுதான் சொல்லணும், அப்படியிருந்த எனக்கு சுபமங்களா ஒரு திறப்பைத் தந்தது. ஒரு விஷூவல் ஆர்ட்டிஸ்ட் எல்லா விஷயங்களையும் தெரிஞ்சு வெச்சிருக்கணும்ங்கறதுதான் அடிப்படை. நீங்க எந்த விஷயத்தைக் கேட்டாலும் என்னால பேச முடியும். இதற்கான காரணம் பரந்துபட்ட வாசிப்புதான்.

இந்த டிராவலை எங்க போய் சரி பார்ப்பீங்க. நாம செய்யறது சரியா தப்பா, நாம சரியான பாதையிலதான் பயணிக்கிறோமான்னு எங்க போய் சரி பார்த்துக்குவீங்க. இன்னொன்னு நாம வாழற காலத்துல எதையும் யோசிக்கறதில்ல. நான் இப்போ இதையெல்லாம் சொல்றேன். அன்னைக்கு கேட்டீங்கன்னா என் கிட்டே பதிலே இருக்காது. எக்சண்ட்ரிக்கா நடந்துகிட்டிருப்பேன். இன்னைக்கு என்னால தொன்னூறுகளை பேச முடியுது. இன்னைக்கு என்னோட செயல்பாடுகளைக் கேட்டீங்கன்னா எனக்குத் தெரியாது. இதுதான் உண்மை. சுபமங்களா அப்படிங்கிற புத்தகத்தை நான் இவ்வளவு அழுத்தம் கொடுத்து சொல்றேன்னா, எனக்கு தியேட்டர் மேல, டான்ஸ் மேல ஒரு இன்வால்வ்மெண்ட் இருந்தது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லணும்னா, சீர்காழி மூவர்கள் ரொம்ப முக்கியமா சொல்ல வேண்டிய விஷயம். பந்தநல்லூர் பாணியோ, வடுவூர் பாணியோ எந்த பாணியா இருந்தாலும், சதுராட்டம் அதனுடைய வளர்ச்சி, பரிணாமம் அப்படிங்கறது எல்லாமே எட்டாவது படிக்கும்போதே தெரியுது. இன்னைக்கு யோசிச்சு வேணா அங்க போய் பார்க்கலாம். ஆனா அது சாதாரணமா மண்டைக்குள்ள ஏற்கெனவே இறங்கி இருக்கு.

சீர்காழி கோவிந்தராஜன், மதுரை சோமு, பித்துக்குளி முருகதாஸ் இப்படிப் பல பேர் எங்க வீட்டுக்கு வந்து பாடியிருக்காங்க. பாட்டு, கச்சேரி, மேளம்னு நடந்துட்டேயிருக்கும். தருமபுரம் ஆதீனத்துல குரு பூசை நடக்குதுன்னா, தவில்லயிருந்து எல்லா வாத்தியமும் வெச்சிருப்பாங்க. அறுபது தவில் வெப்பாங்க. மல்லாரி வாசிச்சா, விடிய விடிய கேட்டுட்டே இருக்கலாம். கேட்டுட்டே இருப்போம். வேற என்ன வேலை இருந்தது. ஒண்ணும் கிடையாது. இன்னைக்கும் கிடையாது.

ரொம்ப சாதாரணமா நாதஸ்வரம், தவில், டான்ஸ், பாட்டு, கூத்து, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் இது எல்லாத்தையும் பார்க்க, கேக்க வாய்ப்பு இருந்துட்டேயிருக்கும். இதோட, எங்க தெருவிலேயே ஒரு லைப்ரரி இருந்தது. ‘ஃபோர் ஸ்டார்’ லைப்ரரின்னு ஒண்ணு நடத்தினேன். வெறும் காமிக்ஸ்தான். நானூத்தைம்பது புத்தகங்கள் இருந்தது. கடைசியா இழுத்து மூடும்போது 1,500 புத்தகம் இருந்தது. 3 டி காமிக்ஸ், பிரிச்சா 3டி மாதிரி வர்ற லேசர் கட் பண்ண காமிக்ஸ் புக்கெல்லாம் இருந்தது. வகைவகையா வெச்சிருந்தேன். பசங்கள்லாம் வந்து புக் எடுப்பாங்க. ஸ்கூல் லீவ் டைம்ல வருஷத்துல மூணு மாசம் மட்டும்தான் அந்த லைப்ர்ரி நடக்கும். மூணு வருஷம் அந்த லைப்ரரியை வீட்லயே நடத்தினேன். அப்போ, இதுக்கெல்லாம் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. ஒரு ஆர்ட் ஃபார்ம்ல இருந்திருக்கேன்றதைத்தான் இது காட்டுது. ஒரு டிராயிங் இல்ல கேரிகேச்சர் பண்ணனும்னா, அதுக்கு அந்த காமிக்ஸ் சேமிப்போட தாக்கம்தான் காரணம். அது உள்ளுக்குள்ள ஆழமா பதிஞ்சிருக்கு. காமிக்ஸ் புத்தகம் வாங்கறோம், நிறைய இருந்ததும் சேமிக்கறோம், அப்புறம் நாலு பேர் படிக்கட்டும்னு அதை லைப்ரரியா மாத்தறோம். இது எல்லாமே தன்னிச்சையா நடந்த விஷயம்.

அப்போ, எல்லாத்தையும் பார்த்தீங்கன்னா காமிக்ஸானாலும் சரி, டெம்பிள் ஆர்ட்டானாலும் சரி எல்லாமே ஐரோப்பியத் தாக்கத்துலயிருந்து விடுதலை பண்ணிக்கறதுக்கான ஒரு ஓட்டமாதான் பார்க்கறேன். ஐரோப்பியத் தன்மை அதிலேயிருந்து என்னை விடுவிச்சுக்கறதுதான் முதல் வேட்கையாவே இருந்தது. எந்த குறிக்கோளுமே இல்லாத வாழ்க்கையில ஒரே ஒரு குறிக்கோள் இருந்திருக்கு. அது ஐரோப்பியத் தன்மையிலயிருந்து விடுவிக்கிறது.

குறிப்பாக, ரவிவர்மாவை முழுக்க முழுக்க நிராகரிச்சிருக்கேன். டெம்பிள் ஆர்ட்ல 1960 – 80 வரை ரவிவர்மாவோட பாதிப்பு அதிகமா இருந்தது. நான் பார்த்த எல்லா கோவில் ஓவியர்கள்கிட்டேயும் ரவிவர்மாவோட ‘Posture’னு சொல்ற காட்சித்தன்மை நிறைய இருந்தது. இந்த விதந்தோதல் இருக்கில்லையா, இதுமேல இருக்க மயக்கம் தெளியத் தெளிய கொஞ்சம் சூரியமூர்த்தியின் வழியாவும் சொல்றேன், இந்த ஐரோப்பியத் தாக்கத்துலயிருந்து விடுவிச்சுக்கத் தோணுச்சு. அதுதான் முழு நோக்கமா இருந்தது. அந்த நோக்கத்தைக் கண்டுபிடிக்கலாம் முடியாது, என்னன்னு தெரியும் அவ்வளவுதான். இதை ஒரு டிரான்ஸ்பர்மேஷன்னு சொல்லலாம். ஐரோப்பிய, கிரீக் பாணி ஓவியங்கள் இதுலயிருந்து விடுபடணும்னு தோணுச்சு. உடல்மொழி, வண்ணக்கலவை, வடிவம் எல்லாத்துலயிருந்தும் விடுபடணும்னு எண்ணம் இருந்திருக்கு.

அப்போதான், 1991ல மெட்ராஸ் ஏர்போர்ட்ல ஒரு ஓவியக் கண்காட்சி வைக்கிறேன். ஒரு பெரிய காதல் தோல்வியையும் அப்போதான் சந்திச்சிருக்கேன். எப்பவும் குடிச்சிட்டு இருந்தவன், முழு நேரக் குடிகாரனா மாறிட்டேன். அப்ப ஒரு கவிதைத் தொகுப்பு போட்டேன். ‘நோட் புக் கவிதைகள்’னு தலைப்பு. என்னல்லாம் உளறியிருப்பேன்னு உங்களுக்கே தெரியும். கவிதையான்னு சொல்ல முடியாது. அப்போ, ராயப்பேட்டையில இப்ப நம்ம ஜெராக்ஸ்னு சொல்றது போல பானா பிரிண்ட்னு ஒண்ணு பண்ணுவாங்க. மண்ணெல்லாம் போட்டு சலிச்சு, நாலு கலர்ல பிரிண்ட் எடுப்பாங்க. மோனோ கலர்லதான் பிரிண்ட் வரும். நாலு முறை பிரிண்ட் போடுவாங்க. அம்மோனியா பிரிண்ட் மாதிரி இது பானா பிரிண்ட். அங்கதான் கவிதைத் தொகுப்பை பிரிண்ட் பண்ணேன். அப்போ ஈஸ்வரி லைப்ரரியில நான் மெம்பர். இந்தியன் ஆபிசர்ஸ் அசோசியேஷன் பில்டிங்க அப்போ தங்கியிருந்தேன். கவிதைத் தொகுப்பு மொத்தம் 60 காப்பி போட்டேன். வாழ்க்கையில வீராவேசமா இதுதான் இறுதி அறிக்கைன்ற மனநிலையில தொகுப்பை போட்டேன்.

ஏர்போர்ட்ல ஒரு சின்ன கேலரி இருக்கும். அங்க ஓவியக் கண்காட்சி நடத்தினேன். அங்க வந்தவங்களுக்கெல்லாம் கவிதைத் தொகுப்பை கொடுத்தேன். பாக்கியிருந்த புத்தகத்தையெல்லாம் நைட்டு தண்ணியைப் போட்டுட்டு போதையில கொளுத்திட்டேன். அப்போ அப்படியான மனநிலை. அப்புறம் மறுநாள் எழுந்து காலேஜ் போக ஆரம்பிச்சுட்டேன். அதோட என் கவிதை வாழ்க்கை முடிஞ்சது.

1991க்குப் பிறகு தொடர்ச்சியா சென்னை, பம்பாய், சண்டிகர் இப்படிப் பல இடங்களில் இந்தியா முழுக்க நிறைய ஓவியக் கண்காட்சிகளை நடத்தியிருக்கேன். நிறைய பேர் ஓவியங்களை வாங்கிட்டுப்போய் கண்காட்சி வெச்சிருக்காங்க. சினிமாவுக்கு தரணி சார் கிட்ட அப்போ வேலை பார்த்தேன். ஐரோப்பிய பாணியிலயிருந்து விடுபட்டு வரணும்ங்கிறதுக்காக என்னோட ஓவிய பாணியை ரெண்டு விதமா பிரிச்சுகிட்டேன். ஒண்ணு, சென்னை, அண்ணா சாலையில இருக்கற விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்ட்டிடியூட்டுக்காக வாரம் ஒரு படம் வரைஞ்சு கொடுப்பேன். அதுக்கு வாராவாரம் 1800 ரூபாய் கொடுப்பாங்க. அதுக்காகவே அதை தொடர்ந்து செஞ்சேன். அது என்ன மாதிரியான படம்னா ஆடு மேய்க்கிற பெண், ஆயா, மண் பானை, கோலம் போடற பெண் இப்படியான படங்கள். ஸ்கெட்ச் அடிச்சு வாஷ் பண்ணி கடகடன்னு வரைஞ்சி ஒரு பிரேம் போட்டு கொண்டுபோய் கொடுத்துடுவோம். அந்த படங்கள் மூலமா கிடைக்கற காசை வெச்சுதான் ஆர்ட் ஷோ பண்ணுவேன். ஆரம்பத்தில கிராபிக் பிரிண்ட்ல நிறைய பிளேட் மேக்கிங் பண்ணியிருக்கேன்.

லலித் அகாடமி ரீஜனல் சென்டர்ல நடந்த ஆர்ட் ஷோல ‘நோ பிளாக்’ அப்படிங்கற படம் செலக்ட் ஆச்சு. அது பிரிண்ட் மேக்கிங்ல செஞ்ச அப்ஸ்ட்ராக்ட் படம். பிரிண்ட் மேக்கிங் பாடத்துக்கு பெருமாள்தான் எனக்கு காலேஜ்ல வாத்தியார். அப்படி கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆச்சு. அரூபம், அரூஉருவம், உருவம் எல்லா பாணியும் பண்ணியிருக்கேன். எனக்கு வெர்னாகுலர் கான்சப்டே கிடைக்கல. அதனால கல்லூரி முடிக்கறதுக்கு ஒரு ஆறு மாசம் முன்னாடியே போய் திருவாவடுதுறை மடத்துல சேர்ந்துடறேன். சாமியாரா போயிடலாம்னு தோணுச்சு. அங்க, சைவ சித்தாந்தம் நடத்திட்டிருந்தாங்க. அதுல சேர்ந்தேன். வாரத்துக்கு ரெண்டு கிளாஸ்தான். சனி, ஞாயிறு முழுநாளும் நடக்கும். ஒண்ணுமே புரியாது. நான் மடத்தோட சேர்ந்து கொஞ்சம் வேலைகளும் பண்ணிட்டிருந்தேன். ரெண்டு வருஷம் அங்க படிச்சு, சித்தாந்த ரத்தினம்னு பட்டம் வாங்கினேன். இப்ப மாத வகுப்பா மாத்திட்டாங்கன்னு நினைக்கறேன். வைத்தியாதன்னு அவர்தான் அங்க எனக்கு வாத்தியார்.

அப்போதான், எனக்கு தமிழ் மொழி சார்ந்த புலமையான விஷயங்கள் தெரிஞ்சது. ஆர்வமும் ஏற்பட்டது. எங்க அத்தையெல்லாம் தருமபுரம் ஆதினத்துல தமிழ் படிச்சவங்க. தருமபுரம் ஐயான்னே எங்க தாத்தாவோட உறவினர் இருந்தாரு. தருமபுரம் ஆதினத்துக்கும் போக ஆரம்பிச்சேன். அப்புறம், தமிழ்சார்ந்து நிறைய படிக்க ஆரம்பிச்சேன். கண்டதை படிச்சேன். ஞானசம்பந்தம் பதிப்பகம்னு இருந்தது, அங்க பஞ்சநாதன்னு ஒருத்தர் இருந்தார். அவர் கொடுக்கற புத்தகத்தையெல்லாம் படிப்பேன். ஒரு மூணு வருஷம் படிச்சேன். அதுக்கு முன்னே சினிமா ஆர்ட் டைரக் ஷன்ல இருந்தேன். அது பிடிக்காமதான் இங்க வந்துட்டேன்.

கேந்திரிய வித்யால ஒரு ஓவிய ஆசிரியர் பரீட்சை வெச்சாங்க. எனக்கு நார்த் ஈஸ்ட் போகணும்னு ஆசை இருந்தது. அங்க ரைஸ் பீர் குடிக்கலாம். வேற மாதிரியான நிலம், மக்களைப் பார்க்கலாம்னு தோணுச்சு. அதனால அந்த பரீட்சைய எழுதிப் பாஸ் பண்ணேன். ஆனா ஒரே பையன்றதால, அப்பா போகக்கூடாதுன்னு சொல்லிட்டார். எங்க ஊர்ல ஹமிதியான்னு ஒரு பெரிய கல்வி நிறுவனம் இருந்தது. அங்க வேலைக்கு வரச் சொன்னாங்க. ஆனா போகலை. அப்புறம் டெல்லி போயிட்டேன். அங்க போய் சுத்திட்டிருந்தேன். அதுக்கப்பறம் வேற மாதிரியா எல்லாம் மாறுச்சு. பிறகு 1999ல அண்ணா யுனிவர்சிட்டிக்கு வந்து நுண்கலை உரையாளரா வேலையில சேர்ந்தேன். இப்ப உதவி பேராசிரியரா இருக்கேன். டிஜிட்டல் ஆர்க்கிடெக்சர்லாம் இங்க இருக்கு. ஓவியம் குறித்த ஆய்வுகள் செஞ்சுகிட்டிருக்கேன். நிறைய ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கேன். நான்கு ஆய்வுக் கட்டுரைகள் ஜர்னல்களில வெளியாகியிருக்கு. அதுல இரண்டு விருது வாங்கியிருக்கு. ஒர்க்கை பொறுத்தவரை, வெர்னாகுலர் சிஸ்டத்துல வர்றதுக்கு உதவியா இருந்தது சைவ சித்தாந்தப் படிப்புதான்.

டெல்லியிலயிருந்து சென்னை வந்த பிறகு, கொஞ்ச நாள் கழிச்சு வெங்கட்சாமிநாதன் அறிமுகமாகிறார். அவரும் டெல்லியில இருந்து சென்னை வந்து மடிப்பாக்கத்துல இருக்கறார். அவர் வந்த நாள்லயிருந்து அவரோட இருந்திருக்கேன். அவர்கிட்டே தினமும் சாயங்காலம் போயி பேசிட்டிருப்பேன். ந.முத்துசாமி, ராமாநுஜம், கந்தசாமின்னு எல்லாரையும் பார்ப்பேன். நடேஷ், கோணங்கின்னு எல்லாரோடயும் ஒரு புரிதல் இருந்தது. ஞானக்கூத்தன், ஓவியர் முரளி, ஆத்மாநாம் இவங்க மூணு பேரும் நண்பர்கள். லலித் கலா அகாடமிக்கு மதியம் சாப்பிடறதுக்கு வந்துடுவாங்க. ஞானக்கூத்தன் ஆபிஸ் அங்க பக்கத்துல இருந்தது. ஓவியர்கள், எழுத்தாளர்களோட தொடர்ச்சியான சந்திப்புகள் இருந்தது. சினிமா தொடர்புகளும் இருந்தது.

தமிழ் சினிமாவுல தெலுங்கு ஓவியர்களோட ஆதிக்கம் அதிகம். இன்னைக்கும் அதான் நிலை. தமிழ் கமர்ஷியல் ஆர்ட் பெருசா டெவலப் ஆகல. ஆகவும் வாய்ப்பில்லை. அதுக்கு நிறைய காரணம் சொல்லலாம். ஏன்னா அது அவ்வளவு உழைப்பைக் கேக்கும். பொதுவா தமிழ்நாட்டில உள்ளவங்க உழைக்கறதுக்கு கஷ்டப்படுவாங்க. சும்மா உக்காந்திருந்து சாப்பாடு போட்டா, சாப்டுட்டு காலாட்டிட்டு உக்காந்துட்டிருப்பாங்க. வேலை செய்யணும்னா செய்ய மாட்டாங்க. உழைக்கவும் தகுதியில்ல, வாழவும் தகுதியில்ல. மேனாமினுக்கித்தனம்னு சொல்வாங்க இல்லையா. தொப்புள்ல கஞ்சின்னுவாங்க. தொப்புள்ல கஞ்சியிருந்தா கூட யாராவது எடுத்து வாயில ஊட்டணும். அதை எழுந்து குடிக்கக்கூட சோம்பேறித்தனம்.

உழைப்பு, சிந்தனை அப்படின்னு ரெண்டு விதமா இதைப் பார்க்கலாம். தஞ்சாவூர் ஜில்லாவைப் பொருத்தவரை சிந்தனைதான் முன்நிற்கும். உழைப்பு கஷ்டம். சிந்தனை அப்படிங்கற இடத்துலயிருந்துதான் எல்லாமே பிறக்குதுன்னு நம்பினாங்க. இன்னைக்கு வரை நம்பறாங்க. சிந்தனைதான் ஒரு பெரிய கலாசார மாற்றத்தை உண்டு பண்ணும், பெரிய வெடிப்பை ஏற்படுத்தும் அப்படிங்கற நம்பிக்க அவங்களுக்கு எப்பவுமே உண்டு. கிராஃப்ட்டை விட சிந்தனையதான் நம்பினாங்க. நானும் அதைதான் நம்பறேன். கிராஃப்ட்டை நம்பி அதுல ஒரு மயக்கத்தை செலுத்திட்டீங்கன்னா எம்ஜிஆர்தான். அதைத் தாண்டி எந்த நடிகரையுமே நீங்க பார்க்க முடியாது. நீங்க சிந்தனையை பார்க்கணும் அப்படிங்கறதுதான் தஞ்சாவூர் ஜில்லாவோட ஒரிஜினல்.

தஞ்சாவூர் ஜில்லாவைப் பொருத்தவரைக்கும் கரகாட்டத்துலயும் கிரியேட்டிவிட்டி இருக்கு, கல்யாண மணவறை செய்யறதிலயும், பானை செய்யறதிலயும் கிரியேட்டிவிட்டி இருக்கு. அதுக்கு சிந்தனையதான் அவங்க பின்புலமா வெச்சாங்க. உழைப்பை எந்த காலத்துலயும் வெக்கல. உழைப்பு செகண்டரிதான்.

உழைப்பு கிராஃப்ட்டை மட்டும்தான் உருவாக்கும். போலச் செய்தலைத்தான் ஊக்கப்படுத்தும். போலச்செய்தல் வழியா நீங்க எதையுமே அடைய முடியாது. எந்த உயர்வையும் சமூகம் அடைய முடியாது. அதனாலதான் அவங்க சிந்தனை மரபை முன்னெடுத்தாங்க. அதனாலதான் நிறைய பேர் அங்கிருந்து எழுத வந்தாங்க. எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, சித்தி ஜூனைதா பேகம், தி.ஜானகிராமன், தஞ்சை ப்ரகாஷ் வெங்கட் சாமிநாதன், இன்னைக்கு இருக்கற சாருநிவேதிதா போன்ற பலர் எழுத வந்தாங்க. ஓவியர்களைப் பொருத்தவரையிலும் அதே மாதிரிதான்.

அப்போ, சிந்தனைக்கும் உழைப்புக்கும் என்ன மாதிரியான தொடர்புன்னு பார்க்கணும். இப்ப நீங்க பாபா அட்டாமிக் சென்டர்னு ஒண்ணை படிக்கறிங்க. பாபா யாருன்னு பார்த்தா அவர் சிந்தனைதான். அவர் ஸ்பானர் மாதிரியான டூல் பிடிக்கிறவர் கிடையாது. அப்போ சிந்தனை மரபுக்கு யாரெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கறாங்கன்னா ஒரு ஆற்றுப்படுகையில இருக்கற நாகரீகத்தோட உச்சத்துல இருக்கறவங்கதான் இதைச் செஞ்சிருக்காங்க. அசோகமித்திரன் கூட மாயவரத்துல பிறந்தவர்தான். இந்திரா பார்த்தசாரதி, ஏன் தி.க.சி. கூட ஒரு பேட்டியில மாயவரம்தான் என் சொந்த ஊர்னு சொல்லியிருக்காரு. அதுமாதிரி, மாயவரம், கும்பகோணம், காவிரிக்கரை அப்படிங்கறது சிந்தனை மரபுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. நீங்க பசுமாட்டை நுகத்தடியில கட்டி சேத்துல அடிச்சா என்ன ஆகும்? அதேதான். அப்போ அததுக்கு ஒரு Pocket இருக்குன்னா, Thought Process சிந்தனை செயல்பாடுதான் முக்கியம், கிராஃப்ட் இல்ல அப்படிங்கற முடிவை எடுத்தாதான், நீங்க மேற்குலக தாக்கத்தை மறுக்கறதாவும் வட்டார (Vernacular) பாக்கெட்டை ஆதரிக்கறதாவும் அர்த்தம். இதான் அந்த ஒன் லைன்.

அப்போ நீங்க எந்த இடத்துலயிருந்து கான்சப்டை பிடிக்கறீங்கன்னா, நான் சைவ மரபை ஒரு கான்சப்ட்டா பிடிக்கறேன். அப்போ, சித்தாந்தம்… தத்துவரீதியா சைவ சித்தாந்தத்தை ஒரு கான்சப்ட்டா வெச்சுக்கறேன். சைவ சித்தாந்தத்துல இருக்கற நுட்பங்களையெல்லாம் தூக்கியெறிஞ்சுடறேன். அதெல்லாம் எனக்கு வேணவே வேணாம். அதேபோல மேற்குலக தாக்கம் இருக்கற எதுவுமே வேணாம்.

எது அழகியல்னு நான் சொல்றேன்னா, மறந்து போகறதுக்கும் ஞாபகம் வெச்சுக்கறதுக்கும் நடுவுல ஒரு state of mind என்ன output ஐ கொடுக்குமோ, என்ன expression ஐ கொடுக்குமோ அதுதான் என்னோட எழுத்து, என்னோட ஓவியம், என்னோட வாழ்க்கை. காலையில என்னன்னு ஞாபகம் இருக்காது, அடுத்தது என்ன… தெரியாது. இப்ப என்னவாயிருக்கே… பேசிட்டிருக்கேன். அவ்வளவுதான். சோ, இது மாங்கா அப்படின்னா மா… ங்… கா… அப்படின்னு தமிழ்ல, Mangoன்னு ஆங்கிலத்துல, பச்சை கலர்ல மரத்துல காய்க்கும்னு இப்படியெல்லாம் அது சார்ந்த ஞாபக அடுக்குகள் இருக்கில்லையா அதெல்லாம் இல்லாம புதுசா ஒண்ணு தோணுச்சுன்னா, உன்னால தோண வைக்க முடியும்னா அதுதான் work of art னு நினைக்கறேன். மொழியாவோ, காட்சியாவோ, சுவையாவோ, ருசியாவோ, பயன்பாடாவோ ஞாபகம் வரக்கூடாது. எதுவாகவுமே ஒண்ணு ஞாபகத்துக்கு வராமல் உனக்கு ஒரு பொருள் புரியணும்னா அதுதான் என்னோட work of art. அதைதான் நான் எழுத்தில விஷூவல்ல கொடுக்கணும்னு நினைக்கறேன்.

விருதுகள்னு பார்த்தா, அகில இந்திய அளவில இரண்டு வாங்கியிருக்கேன். மாநில அளவில மூன்று விருதுகள் கிடைச்சிருக்கு. கலைஞர் கையால, 2007ல தமிழக அரசிடமிருந்து கலைமாமணி விருது வாங்கியிருக்கேன்.

பொதுவாவே ஸ்கூல் படிக்கற போதிருந்தே வாசிக்கறது, எழுதறது, வரையறது இதான் பண்ணிட்டிருந்திருக்கேன். ஒருமுறை ஓவிய விமர்சகர் ஒருத்தர் கேக்கறாங்க… ‘ஏன் சீனிவாஸ், உனக்கு மறக்கறதுக்கும் ஞாபகம் வெச்சுக்கறதுக்கும் நடுவுல உள்ளதுதான் கான்சப்ட். ஒரு வெர்னாகுலர் கான்சப்ட்னு சொல்ற. அப்புறம் உன்னோட வெளிப்படுத்தற விதத்தை ஒரே டூல் வழியா செய்யற. சாக்பீஸ், பிரஷ், கலர் இப்படியாவே பண்றதுதான் உன் வெளிப்பாடு way of expression இருக்கு’ அப்படின்னு கேக்கறாங்க. இது எல்லாமே ஒரு டூல்னு அப்பதான் எனக்கு தெரியுது. இந்த டூல் வழியா மட்டும்தான் express பண்ண முடியுமா, மைக் கொடுத்தா அது வழியா express பண்ண முடியாதா, எழுதினா அது வெளிப்படுத்தற டூல் இல்லையா? எதுவாயிருந்தாலும் அது ஒரு டூல்தான். அது வழியா பண்ண முடியும்னா பண்ணறோம்.

அப்படிதான் விடம்பனம் நாவல், எகட்டுரைகள் எல்லாமே வெளியாச்சு. அப்படிதான் உரையாடலை பதிவு பண்றோம். அப்போ செல்போன்லாம் வர்ற ஆரம்பிச்ச காலம். பேசறதுக்கும் காசு, கேக்கறதுக்கும் காசு. அந்த நேரத்துல என் நண்பர்கிட்ட போன்ல நீ எதையாவது கேளு பதில் சொல்றேன்னு பேசிட்டிருப்போம், அதை ரெகார்ட் பண்ணிக்குவோம்னு சொன்னேன்.

பட்டாபிராம் இந்து காலேஜ் தமிழ்த் துறையில கிரியேட்டிவிட்டி பத்தி பேசக் கூப்பிடறாங்க. அப்போ நோக்கியாவோ எதோ ஒரு போன். கிரியேட்டிவிட்டி பத்தி பேசிட்டு, அந்த செல்போன்ல ஒரு நண்பருக்கு போன் பண்றேன். அவர்கிட்ட கிரியேட்டிவிட்டி பத்தி ரெண்டு கேள்வி கேக்கறேன். அவர் பதில் சொல்றார், மைக் மூலமா இதை மாணவர்கள் கேக்கறாங்க. பசங்க கேள்வி கேக்கறாங்க. அவர் போன் மூலமா பதில் சொல்றார். எல்லாரும் கை தட்டறாங்க. நிகழ்ச்சி முடிஞ்சது. நாங்க ரெண்டு பேர் பேசினோமில்ல, நாங்க அப்படியே கன்டினியூ பண்ண ஆரம்பிச்சோம். அடிக்கடி இப்படி பேசி நிறைய பதிவு பண்ணோம். போதையை போட்டு பேசினது, அனஸ்தீஷியா கொடுக்கற பிரண்ட் ஒருத்தர் இருந்தார், அவர்கிட்ட சொல்லி செடேட்டிவ் குடுத்துகிட்டு பேசறது இப்படிப் பேசி ரெகார்ட் பண்ணோம். அப்படிப் பண்ணதுதான் ‘நம்மோடுதான் பேசுகிறார்கள்’ புத்தகம். நானே பேசினதுதான். என்னோட ஆல்டர் ஈகோவா நண்பர் பாலசுப்ரமணியத்தை வெச்சுகிட்டேன். அது புதிய பார்வையில தொடரா ஒரு வருடம் வந்தது. அப்போ மணா ஆசிரியரா இருந்தார். அப்புறம் வம்சி பதிப்பகம் அதை 2013ல புத்தகமா வெளியிட்டாங்க. இயக்குநர் பாலா அந்தப் புத்தகத்தை வெளியிட்டார். எஸ்.ராமகிருஷ்ணன் முன்னுரை கொடுத்து, புத்தக வெளியீட்டிலயும் பேசினார். அப்புறம், விடம்பனம் நாவல். அது ஒரு சுவாரசியமான விஷயம்.

இன்னொரு விஷயம் தெளிவுபடுத்தணும்., என்னோட தலைமுறையில பிறந்தவங்க எல்லாருமே உண்மையிலேயே Gifted அப்படினு சொல்லலாம். வெளிப்படையா சொல்றதுன்னா ஆரம்பத்துலயிருந்தே நல்லாப் படிக்கணும், பாஸ் பண்ணணும், வேலைக்குப் போய் நிறைய சம்பாதிக்கணும், அடுத்தவனைப் பார்த்து அதை செய்யணும், இதை செய்யணும்னு எண்ணமெல்லாம் எதுவுமே கிடையாது. ஒரே ஒரு நல்ல மீன் சாப்பாடு கொடுத்தீங்கன்னா உங்களுக்கு அடிமையாயிடுவேன். வேற ஒண்ணுமே கிடையாது. ஏன்னா, வீடு சைவ குடும்பம், வீட்ல மீன் கிடையாது. யாராவது மீன் போட்டாங்கன்னா, அவங்க பின்னாடியே போயிடுவேன். வேற எந்த குறிக்கோளோ, நோக்கமோ எதுவும் கிடையாது. பாக்கி எல்லாமே தற்செயலானதுதான், எதிர்பாராம நடந்ததுதான். வந்தா வருது நாம ஏத்துக்கறோம். ஏத்துக்கற இடத்துல நாம இருக்கறோம். அது நமக்குத் தகுதியானதா இருக்கும்.

1989க்கு முன்னாடியே இந்தியா முழுக்கப் பலமுறை சுத்திட்டேன். இந்தியாவுக்குள்ள எல்லா இடத்திலயும் யாராவது ஒரு நண்பராச்சும் இருக்காங்க. ஆனா எனக்கு இந்தி தெரியாது. கையில காசில்லாமலே எல்லா ஊருக்கும் போவேன். நண்பர்கள் மூலமாவே இந்தியா முழுக்க வருஷா வருஷம் ஊர் சுத்திட்டுதான் இருக்கேன். இன்னும் சொல்லப்போனா, பங்களாதேஷ் பார்டர்ல மால்டா ஸ்டேஷன்ல ஒரு டீக்கடைக்காரன் ஃபிரண்டு. போனன்னா என் கூடயே அவனும் சுத்துவான். ரெண்டு பேருக்கும் ஒருத்தருக்கொருத்தர் பேர் கூடத்தெரியாது.

இப்படி பரந்துபட்ட பயணங்கள், வாசிப்பு, நம்பிக்கை, உங்க மேல, உங்கள் மக்கள் மேல, நிலப்பரப்பு மேல ஒரு ஆழ்ந்த கவனம், நம்பிக்கைய ஏற்படுத்தும். நீங்க ஒரிஜினலா இருங்க. நாம ஒரிஜினலா இருக்கோமா இல்லையான்னு பார்த்துக்கணும். அவ்வளவுதான்.

இன்னைக்கு நிலைமை எவ்வளவு மோசமா போயிடுச்சுன்னா, வேற ஒருத்தர் எழுதினதை தானே எழுதினதுபோல போடறதுன்னுலாம் நடக்குது. இது மகா கேவலம். இப்போ, கந்தசாமியா இருக்கட்டும், ஜெயகாந்தன், ஜானகிராமன், வெங்கட் சாமிநாதன் இப்படி எல்லாருமே எதை நோக்கியும், எதை எதிர்பார்த்தும் எதையும் செய்யலை. வெங்கட் சாமிநாதன் டெல்லியில இருந்தார். எல்லா ஆர்ட் எக்ஸிபிஷனுக்கும் போவார். அவருக்கு அது சந்தோஷமா இருந்தது போனார். அவருக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியும். அதனால நிறைய படிச்சார். அவரை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில பத்தி எழுதச் சொல்லி கேட்டாங்க, எழுதினார். வேற ஒண்ணும் இல்லை. பெரிய பெரிய ஜாம்பவானோட ஆர்ட் ஷோவெல்லாம் பார்த்தார். பக்கத்துல இருந்த்து பார்த்தார். சந்தோஷப்பட்டார். ஒரு படம் பார்க்கறார், தியேட்டர் ஆஃப் ஸ்கூல்ல கூப்பிடறாங்க, போறார். அவ்ளோதான். வேற எதையும் எதிர்பார்க்கல. அது ஆத்ம திருப்திக்கான செய்கை மட்டும்தான். ஜானகிராமனையே எடுத்துக்கோங்க. அவர் எந்த சிறுபத்திரிகையிலயும் எழுதறதை எதிர்பார்த்ததில்ல. ஆனா அதைப் பத்தி அவர் கவலைப்பட்டாரா, அவருடைய படைப்புகள் பேசப்படாம போயிடுச்சா? அவர் வருத்தப்பட்டதெல்லாம், இந்த புத்தகம் இன்னும் ரெண்டு கூடுதலா விக்கக்கூடாதாங்கறதைப் பத்திதான். அதுக்குக் காரணம் அது மூலமா ஒருத்தனுக்கு அறிவு போய் சேரும். அவனை அது மாத்தும், இந்த மாதிரி வெற்றுக்கூச்சல்களைக் கேட்டு வீணாப் போகமாட்டான், கலை இலக்கியம் சார்ந்து அமைப்புக்குள்ள வருவான், ஒரு கலாசார மேம்பாடு அடையும், ஒரு சமூகம் வளர்ச்சியடையும் அப்படிதான் நெனச்சாங்க. அதுக்காகத்தான் கூடுதலா ரெண்டு புத்தகம் விக்கலையேன்னு கவலைப்பட்டாங்க.

இந்த மாதிரி, எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கறது என்னன்னா, இன்னைக்கு உங்ககிட்ட மனம் திறந்து பேசறேன். நேத்தி வரைக்கும் என்னை யாருன்னே இங்க யாருக்கும் தெரியாது. நாளைக்குக் காலையில நாம பேசினதெல்லாம் அழிஞ்சு போயிடுச்சுன்னா யாருக்குமே தெரியாது. நான் சொல்லவே மாட்டேன். சொல்லிக்க வேண்டிய அவசியம் இல்லவே இல்லை. எழுதணும்னு நினைச்சா எழுதறேன், வரையணும்னு நினைச்சா வரையறேன். தூங்கணும்னு நினைச்சா தூங்கறேன். தூங்கறதுதான் பிடிக்குதுன்னா தூங்கறேன். எங்கயும் வரிஞ்சு கட்டிகிட்டு போய் எதுக்கும் நிக்க வேண்டிய அவசியமில்ல.

எனக்கு போட்டோ ஸ்டியோ மேல ரொம்ப ஆர்வம். கெம்பு ஸ்டுடியோவுல இருந்த சுந்தரம்தான் போட்டோ எடுக்கக் கத்துக்கொடுத்தார். வயசானவர். வேட்டி கட்டிகிட்டுதான் போட்டோ எடுப்பார். இப்ப இல்லை இறந்துட்டார். என்ன சொல்ல வர்றேன்னா, போட்டோ கத்துக்கணும்னு நினைச்சேன், ஆனா ஸ்டுடியோ வெக்க நினைக்கலை. டெம்பிள் ஆர்ட் பண்ணேனே ஒழிய கோயில் வேலை கான்ட்ராக்ட் எடுக்கணும்னு நினைக்கலை. ராணியில கேரிகேச்சர் போட்டு 100 ரூபா கொடுத்தாங்கன்னா, அங்கேயே வேலையில உக்கார்ந்துடல. சினிமாவுல அதிக சம்பளம், ஒரு நாளைக்கு 2000 ரூபாய் பேட்டா கொடுத்த காலத்துல அங்க வேலை செஞ்சேன். ஆனா, அங்கேயே இருந்துடல. அதுதான் திருப்பியும் சொல்றேன். பணத்துக்காக, சமூக அந்தஸ்துக்காக, மரியாதைக்காக என்னை புனிதனா காண்பிச்சுக்கறதுக்காகன்னு எந்த வேலையுமே செஞ்சதில்ல. அப்படியெல்லாம் எந்தத் தேவையும் இல்ல.

எனவே, சிந்தனை சார்ந்த வெளிப்பாடுகள் மட்டும்தான் முக்கியம். அதனோட ஆரம்பமும், முடிவும் எனக்கு தேவையற்றது. அவசியமே இல்லை, அதைப்பற்றிய கவலையும் இல்ல. அது முடிவில்லாததாவோ, ஆரம்பமே இல்லாததாவோ இருக்கலாம். ரிசல்ட் பத்தியும் கவலையில்ல. அந்த பிராசஸ் நடக்கறதுதான் முக்கியம். அதைதான் பதிவு பண்றேன்.

Leave a reply