கவிதைகள்
இருவாச்சி விருந்து

பூனை சாமர்த்தியமானது

உயிர்த் தொகையைக் குறைப்பதில்

பெரும்பங்கு வகிப்பது

பூனை வேகமாகப் பாயும் போது

இரையும் நொடியில் மாண்டு போகிறது

பூனைக்கு அதிகமாய் பசியெடுக்கும் போது

இரைகளுக்கு இதயத் துடிப்பு அதிகரிக்கிறது

பூனை பசியில்லாத பொழுதுகளில்

தோட்டத்து அணில்களையும் எலிகளையும்

அசுவராஸ்யமாகப் பார்க்கிறது

பலமுறை ருசித்து விட்டதாலோ என்னவோ

பூனை வேப்ப மரத்துப் பொந்திலிருந்த

கிளிக் குஞ்சுகளைக் ஒதுக்கிவிட்டு

அவக்கோடா மரத்துக் கூட்டிலிருந்த

இருவாச்சிக் குஞ்சுகளை

விருந்தாக்கிக் கொண்ட நாளின்

மாலைப் பொழுதில்

பெருங்குரலில் அழுது ஓலமிட்டு

வெறியோடு அங்குமிங்கும்

உறுமியபடி அலைந்து கொண்டிருந்தது,

பத்திரமாக இருக்குமென நினைத்து

விசிறப்பட்ட அட்டைப் பெட்டிக்குள்

விட்டு வைத்திருந்த தன்

குட்டிகளில் ஒன்றைக் காணாது.

Leave a reply