கவிதைகள்
ந.பெரியசாமி கவிதைகள்

1. நிழல்

நினைவு ஏற்றும் காமம்

என்னுள்

நெய் ஏற்கும் தீயாக

அணைய இயலா தூரத்தில்

அணைக்க வேண்டியவள். தவிப்பை அடக்க இயலாது

மலர் கொத்தை ஏந்தி

கண்டடைந்த குளமொன்றின்

கரை நின்றேன்.

ததும்பும் நீரில்

நெளிந்த அவளது உருவத்தை

நிழலாகி தழுவ

வானம் பூக்களானது.

2. நிலம்

பெய்யும் இடம் மறைத்து

இறங்கும் மழையை

இல்லாமலாக்குகிறது

நிலத்தின் காமம்.

எனதுடலை நிலமாக

விரித்து காத்திருக்கிறேன்

மழையாக வருபவளுக்காக

3. இறகு

அயலகப் பறவை

கால கணக்கீட்டின் குளறுபடியால்

வந்து சேர்ந்தது வலசைக்கு

இணையற்றுப் போக.

தகிக்கும் காமம் தணிக்க

குளத்தின் நீரைக் கொத்துவதும்

மரத்தில் அமர்வதுமாக

விளையாட்டிலிருந்தது.

புதர் அருகிலிருந்து

கொத்தும் கண்கள் நான்கின்

பார்வை சகிக்காது

பறக்கத் தொடங்கியதன் பதற்றத்தில் வீழ்ந்த இறகு

'காண்ட'மாய் பொழிந்தது

அவ்விடம்.

4. சரணாகதி

பனி

இருப்பை காட்டத் தொடங்கிய முன்னிரவு

நதியானாள்.

சுகித்தலை வேண்டியவன் மீனானான்.

இங்குமங்குமாக அலைவுற்ற மீன்

ஆசை கொண்டது

நீந்துதலின் தீவிரத்தில்

நதியை விழுங்க.

அற்புதங்கள்

ஆசைக்கேற்ப நிகழாதெனும்

உண்மை உணர்ந்து

சரணாகதியின் தித்திப்பால்.

5. புன்னகை நட்சத்திரம்

வானிலை

மிதமான குளிரில்

எதிர்புற மாடிக்கு

வந்து சேர்ந்தவள்

சிலுப்பியபடியே இருக்கும் புறாவாக

நகக் கண்களில் அண்டிய அழுக்கை்

அகற்றியபடி அங்குமிங்கும்

சுழற்றியபடி இருந்தாள் பார்வையை.

பரிச்சயம் கொண்ட முகமென

நினைவிலிருக்கும் பெயர்களில்

தேடிக்கொண்டிருந்தேன்.

மாயக்கணமாகியது

கையசைப்பில்

புன்னகையை நட்சத்திரமாக்கினாள்.

கண்களில் துளிர்த்த காமம்

கருவியில் குளிர்ந்தது.

Leave a reply